Published : 09 Apr 2020 07:03 PM
Last Updated : 09 Apr 2020 07:03 PM
அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக வீட்டிலிருந்து 1 கி.மீ.க்கு மேல் வெளியே வர வேண்டாம் எனவும், மீறி வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் வீ.வரதராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அத்தியாவசியப் பணிக்கு மட்டும் வெளியே வர பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் இதை தவறாகப் பயன்படுத்திக்கொண்டு பல்வேறு இடங்களில் சுற்றித் திரிவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, திருச்சி மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளுமாறு போலீஸாருக்கு மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ உத்தரவிட்டார். மேலும், திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை பகுதிக்கு இன்று (ஏப்.9) சென்ற அவர், சுமார் 1 மணிநேரத்துக்கும் மேல் அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார்.
பின்னர் இதுகுறித்து காவல் ஆணையர் வி.வரதராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா வைரஸ் அபாயம் குறித்து அரசும், காவல்துறையும் எவ்வளவோ எடுத்துக் கூறிய பிறகும், பொதுமக்களில் சிலர் புரிந்து கொள்ளாமல் நடமாடுகின்றனர்.
அதுபோன்றவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக திருச்சி மாநகர் முழுவதும் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணிக்குள்ளாக மட்டும் 295 இருசக்கர வாகனங்கள், 11 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.1.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து 8-ம் தேதி வரை ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2,469 இருசக்கர வாகனங்கள், 22 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கே.கே.நகரிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி திருச்சி மாநகரில் 11 இடங்களில் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே மளிகைக் கடைகள் செயல்படுகின்றன. எனவே, இனிமேல் பொதுமக்கள் யாரும், அத்தியாவசியத் தேவைக்கான பொருட்களை வாங்க, தங்களது வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேல் வெளியே வரக்கூடாது.
மீறி வந்தால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவமனை செல்வோருக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவசியமின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT