Published : 09 Apr 2020 06:48 PM
Last Updated : 09 Apr 2020 06:48 PM
யுஜிசி-நெட், ஜேஇஇ, ஐசிஏஆர் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதிகளில் மாற்றம் செய்து, மாணவர்களுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது தேசிய தேர்வுகள் முகமை.
தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளுக்கான தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் நாட்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் பின்னர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
இதற்கிடையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும் மூடப்பட்டன.
இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். பெரும்பாலான தேர்வுகளுக்கு இம்மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க பல்வேறு நடைமுறைகள் உள்ளதால், மாணவர்கள் செய்வதறியாது தவித்து வந்தனர்.
இந்நிலையில், தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்பட உள்ள தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை பொது இயக்குநர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
அதன் விவரம்:
* கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வுக்கு (யுஜிசி-நெட் மற்றும் சிஎஸ்ஐஆர்-நெட் ) விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி 16.04.2020-ல் இருந்து, 16.05.2020 வரை ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
* தேசிய விடுதி மேலாண்மைப் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி 31.03.2020-ல் இருந்து, 30.04.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. மற்றும் எம்பிஏ படிப்பதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி 23.03.2020-ல் இருந்து 30.04.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக (ஐசிஏஆர்) நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி 31.03.2020-ல் இருந்து 30.04.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி 31.03.2020-ல் இருந்து 30.04.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* அகில இந்திய ஆயுஷ் முதுநிலை பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி 30.04.2020-ல் இருந்து, 31.05.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் www.nta.ac.in என்ற இணையதளத்தில் மாலை 4 மணி வரையில் விண்ணப்பிக்கலாம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ மற்று பேடிஎம் மூலமாக இரவு 11.50 மணி வரை தேர்வுக் கட்டணம் செலுத்தலாம்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் தேர்வுக்கு குறித்து எவ்வித அச்சமோ, குழப்பமோ அடையத் தேவையில்லை. நீட்டிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தைப் பயன்படுத்தி, அதிக மதிப்பெண் பெற்று நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற முயல வேண்டும். தேர்வு குறித்த அறிவிப்புத் தகவல்களை தேசிய தேர்வுகள் முகமை இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 82874-71852, 81783-59845, 96501-73668 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT