Published : 09 Apr 2020 03:36 PM
Last Updated : 09 Apr 2020 03:36 PM
கன்னியாகுமரியில் ஆசிரியர்கள் ஜோடிக்கு நடைபெற்ற திருமணத்தில் 15 பேர் மட்டுமே பங்கேற்று சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. மேலும் திருமணத்தின்போது உறவினர்களிடம் கரோனா விழிப்புணர்வை மணமக்கள் ஏற்படுத்தினர்.
கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் திருமணம், கோயில் விழாக்கள் என ஆடம்பர விழாக்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட திருமணங்கள் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி சமூக விழிப்புணர்வுடன் போதிய இடைவெளியை கடைபிடித்து குமரியில் நடைபெற்ற திருமணம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் காப்பிகாட்டை சேர்ந்த தாசையன் என்பவரின் மகன் அருண்குமார்(31). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் மார்த்தாண்டத்தை அடுத்த மருதங்கோடு கோபாலன் மகள் ஆசிரியை கணேஷ்வரி (26) என்பவருக்கும் கழுவன்திட்டையில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று திருமணம் பிரமாண்டமாக நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இரு வீட்டாரும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்பிதழ்களை உறவினர்கள், நண்பர்களிடம் கொடுத்திருந்தனர்.
தற்போது ஊரடங்கு, மற்றும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் குறித்த தேதியில் சமூக இடைவெளியுடன் திருமணத்தை நடத்தி முடிப்பதற்கு மணமக்கள் பெற்றோரிடம் வலியுறுத்தினர்.
அதன்படி ஆலம்பாறை கிருஷ்ணன் கோயிலில் வைத்து இன்று எளிமையான முறையில் வேதமந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது.
மணமகன், மற்றும் மணமகள் வீட்டில் இருந்து பெற்றோர், மற்றும் சகோதர, சகோதாரிகள் என 15 பேர் மட்டுமே இந்தத் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்கள் அருண்குமார், கணேஷ்வரி ஆகியோர் முககவசம் அணிந்தவாறு திருமணம் செய்துகொண்டனர். மேலும் திருமணத்தில் பங்கேற்ற அர்சகர், மற்றும் இரு வீட்டாரும் முககவசம் அணிந்திருந்தனர்.
கரோனா தொற்று ஏற்படாத வகையில் சமூக இடைவெளிகளை கடைபிடிப்பதுடன் கைகளை சுத்தம் செய்வது, மற்றும் பொது இடங்களுக்கு செல்லாமல் தனித்திருப்பது குறித்த விழிப்புணர்வையும் ஆசிரியர்கள் ஜோடியான மணமக்கள் ஏற்படுத்தினர்.
கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக இடைவெளியுடன் குமரியில் நடந்த திருமணம் அனைத்து தரப்பினரிடையேயும் பாராட்டை பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT