Published : 09 Apr 2020 03:36 PM
Last Updated : 09 Apr 2020 03:36 PM
தமிழகத்திற்கு 4 லட்சம் ரேபிட் கிட் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி இன்று (ஏப்.9) தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது:
"தமிழகத்தில் 92 ஆயிரத்து 814 பயணிகள் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். 32 ஆயிரத்து 75 பேர் 28 நாட்கள் கண்காணிப்பை நிறைவு செய்துள்ளனர்.
நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளவர்களை பரிசோதிக்க ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசின் சார்பாக 12,தனியார் சார்பாக 7 என மொத்தம் 19 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
6,095 பேர் ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 738 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 344 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.
கரோனா சந்தேகத்தால் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் 1,953 பேர். கரோனா சிகிச்சைக்கு பிறகு குணமாகி வீடு திரும்பியவர்கள் 21 பேர்.
3,371 வெண்டிலேட்டர்கள் கையிருப்பில் உள்ளன. அரசின் சார்பாக, 22 ஆயிரத்து 49 படுக்கைகள் தனிப்பிரிவில் இருக்கின்றன. தனியார் சார்பாக, 10 ஆயிரத்து 322 படுக்கைகள் உள்ளன. மொத்தம் 32 ஆயிரத்து 371 படுக்கைகள் உள்ளன.
கரோனாவால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரசின் கையிருப்பில் மூன்று மடிப்பு முகக்கவசங்கள், எண்-95 முகக்கவசங்கள், பிபிஇ பாதுகாப்பு உடைகள், காய்ச்சல் மருந்துகள், ஆண்டிபயாட்டிக் மருந்துகள், ஐவி திரவங்கள், சோதனை கிட் போதிய அளவில் உள்ளன.
2,500 வெண்டிலேட்டர்கள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் ரேபிட் கிட் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 50 ஆயிரம் கிட் இன்று இரவு வந்துவிடும். 50 ஆயிரம் கிட் மத்திய அரசு தருவதாக உறுதியளித்துள்ளது. அவை நாளைக்கு வந்துவிடும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT