Published : 09 Apr 2020 03:35 PM
Last Updated : 09 Apr 2020 03:35 PM
கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த மயிலாப்பூர் காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டத்துக்க்ட்பட்ட பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றியவர் அருண்காந்தி(33). திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த அருண்காந்தி, 2009-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் 2 மணிக்கு டூட்டிக்கு வந்தவர் சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில் பணியிலிருந்தார்.
3.15 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட மயங்கிவிழுந்த அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் வழியிலேயே இறந்த விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து மன உளைச்சல் இன்றி பணியாற்றுமாறு காவலர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் 12 கண்காணிப்புக் குழுக்களுடன் ஆலோசனை நடத்தியப்பின் பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி உயிரிழந்த காவலர் அருண்காந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இழப்பீடு பற்றி அறிவித்தார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் எனவும் அறிவித்தார்.
அவரது அறிவிப்பு:
“கரோனா தடுப்பு நடவடிக்கையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் பணியின்போது இறந்துள்ளனர். அவருக்கு எனது இரங்கலை தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.
கரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட சுகாதாரபணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட வர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் 10லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
மேலும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசு வேலை அளிக்கப்படும்”.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT