Published : 09 Apr 2020 02:18 PM
Last Updated : 09 Apr 2020 02:18 PM
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் விடுவிக்கப்பட்ட கரோனா தொற்றுடைய இளைஞரைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கரோனா தொற்றுடைய இளைஞர் நிதின் ஷர்மா 'நோய்த் தொற்று இல்லை' என்று தவறுதலாக விடுவிக்கப்பட்டுள்ளார். அவரைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச்சாவடிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி பட்டேல் நகரைச் சேர்ந்த நிதின் ஷர்மா (30) என்ற இளைஞர், கடந்த 6-ம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, கரோனா பரிசோதனை முடிந்து, 'கரோனா தொற்று இல்லை' என கடந்த 7-ம் தேதி இரவு விழுப்புரம் மாவட்டத்தில் சிலருடன் நிதின் ஷர்மாவைவும் சுகாதாரத் துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர், நள்ளிரவில் வந்த சோதனை அறிக்கையில் அனுப்பி வைக்கப்பட்ட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை மருத்துவமனைக்கு உடனே அழைத்து வரும்படி போலீஸாரிடம் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டது.
அதன்படி விடுவிக்கப்பட்ட 4 பேரில் விழுப்புரத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் மீண்டும் சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களை மீண்டும் சிறப்புப் பிரிவில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
இதற்கிடையே விடுவிக்கப்பட்ட நிதின் ஷர்மாவை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், புதுச்சேரி, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாரும் தேடி வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள 9 மதுவிலக்கு சோதனைச்சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
நிதின் ஷர்மா விடுவிக்கப்பட்டது எப்படி?
நிதின் ஷர்மா எப்படி விடுவிக்கப்பட்டார் என சுகாதாரத்துறை உயர் அலுவலர்களிடம் கேட்டபோது, "பொதுவாக கரோனா தொற்று உள்ளவர்களின் சோதனை முடிவில் தொற்று உள்ளது, தொற்று இல்லை எனத் தெரிந்துவிடும். முடிவில் சந்தேகம் இருக்கும்பட்சத்தில் சோதனை முடிவுக்காக காத்திருப்பில் வைக்கப்படும்.
கடந்த 7-ம் தேதி விடுவிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்ற சோதனை அறிக்கையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டது. பின்னர் அவர்களில் 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே 3 பேர் பிடிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளனர். நிதின் ஷர்மா இன்னமும் சிக்கவில்லை. இது கிளரிக்கல் மிஸ்டேக்" என்றனர்.
இதுகுறித்து முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பொன்முடியிடம் கேட்டபோது, "சுகாதரத்துறையும் காவல்துறையும் இணைந்து கவனத்துடன் செயல்பட வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.
மேலும், இதுகுறித்து மருத்துவர்கள் சிலரிடம் கேட்டபோது, "நாடு முழுவதும் சுகாதாரத்துறையினரின் அறிக்கையின்படியே மக்கள் சற்று நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். மிக அலட்சியமாக இது 'கிளரிக்கல் மிஸ்டேக்' என கீழ்மட்ட ஊழியர்கள் மீது பழியைப் போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT