Published : 09 Apr 2020 01:49 PM
Last Updated : 09 Apr 2020 01:49 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே தீவனம் இன்றி பிராய்லர் கோழிகள் பல இறந்தநிலையில், மேலும் பசியால் இறக்கும் தருவாயில் உள்ள பிராய்லர் கோழிக்குஞ்சுகளை உயிருடன் மண்ணில் புதைக்க பண்ணையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கோழி வளர்ப்போர் வேதனை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள டிகேஎன்.புதூர், ரூக்குவார்பட்டி, அமரபூண்டி, எரமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் சிறிய அளவிலான ஷெட் அமைத்து கோழிப்பண்ணைகள் வைத்துள்ளனர்.
இவற்றில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு மற்றும் தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோழிகளுக்கு வழங்கவேண்டிய தீவனங்கள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கோழிக் குஞ்சுகளுக்கு தீவனம் வழங்காததால் கோழிக்குஞ்சுகள் ஒவ்வொன்றாக இறந்துவருகிறது.
பல கோழிக்குஞ்சுகள் இறக்கும் தருவாயில் உள்ளன. இதனால் மனவேதனை அடைந்த கோழிப்பண்ணைவைத்துள்ள விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே பண்ணையில் வளர்க்கப்படும் கோழிக்குஞ்சுகளை என்ன செய்வது என்று தெரியாமல் இறந்த கோழிகளுடன் சேர்த்து உயிருடன் உள்ள ஆயிரக்கணக்கான கோழிகளையும் மண்ணில் புதைக்க விவசாயிகள் முடிவுசெய்துள்ளனர். இது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT