Published : 09 Apr 2020 11:52 AM
Last Updated : 09 Apr 2020 11:52 AM
கரோனா காலத்தில் மகத்தான சேவை செய்யும் தூய்மைப் பணியாளர்களைக் கவுரவிக்கும் வகையில் நெல்லை மாநகர காவல்துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"தமிழகத்தில் திருநெல்வேலி மாநகரில் கரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் உன்னதப் பணியாற்றி வரும் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை கவுரவப் படுத்தும் வகையில் மாநகர காவல் ஆணையாளர் தீபக் தாமோர் ஐபிஎஸ் ஆலோசனையின் பேரில் இன்று (09-04-2020) திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் “மரியாதை காப்பு அணிவகுப்பு” ( Guard of Honour) மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.
ஊழியர்கள் சார்பில் மாநகர சுகாதார அலுவலர் சதீஷ் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் , உதவி ஆட்சியர் (ப) சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ், காவல் உதவி ஆணையர் சதிஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அணிவகுப்பு மரியாதைக்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை உதவி ஆணையர் முத்தரசு , ஆய்வாளர் சாது சிதம்பரம் ஆகியோர் செய்திருந்தனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கான அணிவகுப்பு மரியாதை அவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையிலும், நெகிழ்ச்சியூட்டும் வகையிலும் அமைந்தது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிவகுப்பு மரியாதையால் அங்கு திரண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றனர்.
நெருக்கடி காலத்தில் நமக்காக உயிரையும் பொருட்படுத்தாது தூய்மைப் பணியில் ஈடுபடும் துப்புரவாளர்களை இனியும் 'குப்பைக்காரர்கள்' என்று பொதுமைப்படுத்தும் எண்ணம் பெருமளவில் மாறும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment