Published : 08 Apr 2020 08:15 PM
Last Updated : 08 Apr 2020 08:15 PM

தூய்மைப் பணியாளர்களின் ஈடில்லா உழைப்பை மக்கள் உணர்ந்துள்ளனர்!- பி.ஆர்.நடராஜன் எம்.பி. உருக்கம்

கோவை எம்.பி.யான பி.ஆர்.நடராஜன் கோவை மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்ததோடு அவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள முகக் கவசங்களையும் வழங்கினார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரப் பணியாளர்களின் உழைப்பு இன்றியமையாததாக உள்ளது. இத்தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தேவைக்கேற்ப வழங்கப்படவில்லை என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறார் பி.ஆர்.நடராஜன்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள முகக் கவசங்களைத் தருவித்து மாநகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு புதனன்று நேரில் வழங்கினார்.

முகக் கவசங்களை வழங்கிய அவர் தொழிலாளர்கள் மத்தியில் பேசுகையில், ''தூய்மைப் பணியாளர்களின் ஈடில்லாத உழைப்பை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். உங்கள் சேவையை வெளிப்படையாகப் பாராட்டும் நிகழ்வு நடந்து வருகிறது. இது எதிர்காலத்திலும் தொடரும் என நான் நம்புகிறேன். உங்களின் நியாயமான கோரிக்கையை வென்றெடுக்க உங்களோடு எப்போதும் மார்க்சிஸ்ட் கட்சியும் சிஐடியு தொழிற்சங்கமும் துணை நிற்கும். அதேநேரத்தில், நீங்கள் உங்களது உடல் நலனையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். அதற்கு உரிய முன்னெச்சரிக்கையோடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று சொன்னார்.

முன்னதாக, துடியலூர், உடையாம்பாளையம், சரவணம்பட்டி, கணபதி, வடகோவை, புலியகுளம், பீளமேடு, ஒண்டிபுதூர் மற்றும் இருகூர் பகுதிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்து முகக் கவசங்களை வழங்கினார் நடராஜன்.

இந்த நிகழ்வுகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி மற்றும் பாலாமூர்த்தி, கே.மனோகரன், ரத்தினகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x