Published : 08 Apr 2020 08:02 PM
Last Updated : 08 Apr 2020 08:02 PM

அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துக: மாநிலங்களுக்கு உள்துறைச் செயலர் கடிதம்

நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல் சுமுகமாக பராமரிக்கப்படுவதற்கென அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, அவசர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுச் செயலர்களுக்கும் மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

நாட்டில் கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் வரத்து குறைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி பொருட்களைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்கும் நடவடிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க, அவசர நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:

''அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ன்படி இந்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பு வரம்பை நிர்ணயித்தல் , அதிகபட்ச விலை நிர்ணயம், உற்பத்தியை உயர்த்துதல், மொத்த விற்பனையாளர்களின் கணக்குகளை ஆய்வு செய்தல் மற்றும் இதுபோன்றவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

பல்வேறு காரணங்களால், குறிப்பாக தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சூழலில் பதுக்கல், கருப்புச் சந்தை, கொள்ளை லாப விற்பனை, எதிர்பார்ப்பு வர்த்தகம் ஆகியவற்றுக்கான சாத்தியக் கூறுகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். எனவே. பொதுமக்களுக்கு நியாயமான விலையில் இந்தப் பொருட்கள் கிடைக்கச் செய்ய மாநிலங்கள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, பேரிடர் நிர்வாகச் சட்டத்தின் கீழ், உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி, உணவுப் பொருட்கள், மருந்துகள், மருத்துவக் கருவிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான உற்பத்தி, போக்குவரத்து மற்றும் வழங்கல் சங்கிலிச் செயல்பாடுகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது”.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x