Published : 08 Apr 2020 05:15 PM
Last Updated : 08 Apr 2020 05:15 PM
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 2 லட்ச ரூபாய் காப்பீடு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் பொருந்துமா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் இரு வகைகளாக (நேரடி அரசு நியமனம் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள்) உள்ளனர். இவர்கள் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுகிறார்கள்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளர் வரை அனைவருக்கும் 50 லட்ச ரூபாய் காப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசும் 2 லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளது.
இந்நிலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு 50 லட்ச ரூபாய் காப்பீடு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், கரோனோ போன்ற உயிர்க்கொல்லி வைரஸ் பரவும் இந்த இக்கட்டான நிலையிலும் தூய்மைப் பணி செய்யும் இவர்களுக்கு போதிய நோய்த் தடுப்பு சாதனங்களோ, உயிர்காக்கும் சாதனங்களோ வழங்கப்படுவதில்லை என்பதால், காப்பீடு செய்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. காப்பீடு தொடர்பாக மத்திய, மாநில அரசின் உத்தரவுகளை தமிழக அரசு தாக்கல் செய்தது. அவற்றை ஆராய்ந்த நீதிபதிகள், தமிழக அரசு அறிவித்துள்ள 2 லட்ச ரூபாய் காப்பீடு ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் பொருந்துமா? என்பது தெளிவாக இல்லை என்பதால் அதுகுறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது கிருமிநாசினி, முகக்கவசம் மற்றும் கையுறையுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். இதேபோல, ஊர்க்காவல் படையினருக்கு ரூ.25 லட்சம் காப்பீடு செய்யக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவுக்கும் 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT