Published : 08 Apr 2020 02:22 PM
Last Updated : 08 Apr 2020 02:22 PM
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11-ஆக இருக்கையில் அரசு திடீரென 12 என அறிக்கை வெளியிட்டதால் அதிகாரிகளிடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனாலும், நாளுக்கு நாள் கரானோ வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தமிழகத்தில் கரானோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 4ம் தேதி 485-ஆக இருந்தது. அன்றுவரை விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 பேர் மட்டுமே.
தொடர்ந்து கடந்த 6-ம் தேதி அரசு வெளியிட்ட அறிக்கைபடி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்தது. ஆனால், அன்றைய அறிக்கையில் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் யாரும் இல்லை என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுவரை விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 11-ஆகவே இருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை மாவட்ட வாரியாக கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் விவர பட்டியலில் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலும், 6-ம் தேதி ஒருவர் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட புதிய நபர் யார் என்பது மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவத்துறையினருக்கும் தெரியாததால் அதிர்ச்சியடைந்தனர். அதோடு, அரசு வெளியிட்ட பாதிக்கப்பட்டோரின் மாவட்ட வாரியான பட்டியலில் வரிசை எண்ணிலும் குளறுபடி இருந்தது.
குறிப்பாக 9-வது வரிசை எண்ணிற்கு அடுத்ததாக 12 என்றும், அதன்பின் வரிசை எண் 10, 11, 19, 13, 24, 14,15,16,17க்குப் பிறகு 20,23 என்றும் அதைத் தொடர்ந்து 18,21,22,25 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 மட்டுமே என்றும், வரிசை எண் மற்றும் மாவட்ட வாரியான பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியால் விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 என தவறுதலாக குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT