Published : 08 Apr 2020 01:55 PM
Last Updated : 08 Apr 2020 01:55 PM

ஏழை மக்களுக்கு மாதம் ரூ.10,000; நடுத்தர மக்களுக்கு மாதம் ரூ.5000 உதவி நிதி: பிரதமரிடம் திமுக கோரிக்கை

கரோனா பாதிப்பு உள்ள நிலையில் ஏழை எளிய மக்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும், நடுத்தர மக்களுக்கு ரூ.5 ஆயிரமும் உதவி நிதி வழங்க வேண்டும். ரூ.20 ஆயிரம் கோடி செலவில் நாடாளுமன்றம் கட்டும் பணியை ஒத்திவைக்க வேண்டும் என பிரதமரிடம் திமுக கோரிக்கை வைத்துள்ளது.

பிரதமர் மோடி கரோனா பாதிப்பு குறித்து இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வழியாக கலந்துகொண்டார். அதில் திமுக சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் ஆலோசனைகள் குறித்து டி.ஆர்.பாலு பேட்டி அளித்தார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு அளித்த பேட்டி:

“மத்திய அரசு, மாநில அரசு, குறிப்பாக தமிழகத்தில் நடைபெறும் சுகாதாரப்பணிகளுக்கு எல்லோரும் ஒத்துழைக்கவேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியரிடம் என்ன நடக்கிறது என்பதை அறிந்து பொதுமக்கள் தேவை என்ன என்பதை அறிந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் திமுக தலைவர் ஏற்கெனவே எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முதலில் திமுக சார்பில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை அனுப்பி வைத்தோம். எம்.பி. நிதியிலிருந்து குறைந்தது ஒரு கோடி ரூபாய் அளவுக்கு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்தோம். நாடாளுமன்ற அலுவலகங்கள், கட்சி அலுவலகங்கள் தேவைப்பட்டால் கரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டது. கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தோம்.

அரசியல் மாச்சரியங்களை, கருத்து வேறுபாடுகளைக் களைந்து இணைந்து பணியாற்ற வேண்டும் என பிரதமரிடம் சொன்னோம், ஈரானில் 300 மீனவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

இதுபோன்ற மோசமான நிலை உள்ள நிலையில் 20 ஆயிரம் கோடி செலவில் நாடாளுமன்றம் தேவையா? அந்த நிதியை நாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள், நகராட்சி, ஊராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பணியைப் பாராட்டுவதாகத் தெரிவித்தோம். அவர்கள் பணியைப் போற்றும் வண்ணம் அவர்களுக்கு 3 மடங்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

சாதாரண ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் அளிக்க வேண்டும், ரூ.5000 வீதம் 2 முறையும், நடுத்தர மக்கள் எல்பிஜி கேஸ் உபயோகிப்பவர்களுக்கு மாதம் ரூ.5000 தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

கரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 1 லட்சம் பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சோதனை செய்யவில்லை. சோதனை செய்ய ஆய்வுக்கருவிகளும் இல்லை. உடனடியாக சோதனை செய்யும் கருவிகள் வழங்க வேண்டும் எனக் கோரினோம். நோய் வந்தவர்களுக்கு சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்குத் தேவையான கவச உடை இங்கு இல்லை. தமிழ்நாட்டில் எச்.ஐ.வி சிகிச்சையின்போது அணியும் கவச உடைகளைப் போட்டு பணியாற்ற மருத்துவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அதை மாற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நிதியில் தமிழகத்துக்குக் குறைவாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை போக்கப்படவேண்டும். தமிழகத்துக்கு அளித்த நிதி போதாது. கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தோம்.

கரோனா தொற்று குறித்து மதத் தீவிரவாதிகள் சிலர் இது குறிப்பிட்ட மதத்தினர் மூலமாகப் பரவுகிறது என கரோனாவுக்கு மதச்சாயம் பூசுகிறார்கள். அதைத் தடுக்கும் விதமாக பிரதமர், உள்துறை அமைச்சர் பகிரங்கமாக தொலைக்காட்சியில் எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம்.

ஊரடங்கை நீட்டிப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து அம்சங்களையும் செய்துவிட்டு நீட்டிக்கலாம். சிறு, குறு தொழிற்சாலைகளைத் திறக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் 700 பேர் உள்ளனர். அதற்காக 70 லட்சம் பேர் பாதிக்கப்படும் நிலை வேண்டாம். அவர்களுக்காக சிறு, குறு தொழிற்சாலைகளைத் தொடங்குங்கள் எனக் கேட்டுக்கொண்டோம்.

ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது. அதைவிடப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஓய்வுபெற்ற ரிசர்வ் வங்கி ஆளுநர்கள், பொருளாதார நிபுணர்களைக் கொண்ட குழுவைஅமையுங்கள் என்று தெரிவித்தோம். அதன் மூலம் பொருளாதாரப் பாதிப்பை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம்.

ஊரடங்கு குறித்து பொதுவாக கருத்து தெரிவிக்க முடியாது. நான் மருத்துவரும் அல்ல. ஆகவே இருக்கும் நிலைக்கு ஏற்ப இருக்கவேண்டும் எனத் தெரிவித்தேன். ஊரடங்கை நீட்டிப்பதும், அகற்றுவதும் அரசு, சுகாதாரத்துறை எடுக்கும் முடிவு ஆகும்”.

இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x