Published : 08 Apr 2020 01:25 PM
Last Updated : 08 Apr 2020 01:25 PM
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து நடமாடும் மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் தொடங்கப்பட்டன என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
“கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மளிகைக் கடைகள், பால் கடைகள், மருந்தகங்கள், காய்கறிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளபடி குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயங்கும்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சென்னையில் அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய 75 சந்தைகளில் 60 சந்தைகள் சாலைகள், பேருந்து நிலையங்கள், காலி மனைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறுமின்றி அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்காடிகள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் நேற்று மாலை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில், நியாயமான விலையில் பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் கிடைக்க சென்னை மாநகரம் முழுவதும் சுமார் 5,000 மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் 2000 சிறிய மோட்டார் வாகனங்களின் மூலம் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்காடிகள் தொடங்க முடிவெடுக்கப்பட்டது.
இந்த நடமாடும் காய்கறி மற்றும் மளிகை வாகனங்களில் செல்லும் வணிகர்கள் கையுறை, முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டு விற்பனை செய்வார்கள். பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வணிகர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும்.
மேலும் இந்த வாகனங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியின் பதாகைகள் அமைக்கப்பட்டிருக்கும்.. இந்த வணிகர்களுக்கு அவர்களுடைய பகுதிகளிலிருந்து காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களைக் கொண்டு செல்ல ஏதுவாக அவர்களுக்கான வாகனப் போக்குவரத்திற்கான அடையாள அட்டையும் மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படும்”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இக்கூட்டத்தில் பணிகள் பிரிவு துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT