

கரோனாவால் ஊரடங்கு உத்தரவுநீட்டிக்கப்பட்டால் நீதிமன்றங்களில் விசாரணையை எப்படி மேற்கொள்ளலாம் என்பது குறித்து வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளுடன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற பணிகளும் தடைபட்டுள்ளன. அவசர வழக்குகள் மட்டும் ஜூம் ஆப் மூலம் கைபேசி காணொலிக் காட்சி மூலமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு ஏப்.14 வரை அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் நீதிமன்றங்களில் விசாரணையை எப்படி மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக நேற்று வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளுடன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், அகில இந்திய பார் கவுன்சில் இணை தலைவர் எஸ்.பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது ஆன்லைன் மூலமாகஅவசர வழக்குகளை தாக்கல் செய்யும்போது உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் இதே நிலையைத் தொடருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி இன்று (ஏப்.8) தமிழக அரசின் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிகிறது.
சிறு குற்ற வழக்குகளில் சிறைகளில் உள்ளவர்களை உடனடியாக விடுவிக்கும் வகையில் ஜாமீன் மற்றும் ஆட்கொணர்வு மனுக்களை அவசர வழக்குகளாக விசாரிக்க வேண்டுமென்றும் இதுதொடர்பாக கீழமை நீதிமன்றங்களுக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியிடம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பரிசீலிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.