Last Updated : 07 Apr, 2020 09:24 PM

 

Published : 07 Apr 2020 09:24 PM
Last Updated : 07 Apr 2020 09:24 PM

புதுச்சேரியில் முதல்வர் தொகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு; உறவினர்கள் புகார்

சித்தரிப்புப் படம்.

புதுச்சேரி

புதுச்சேரியில் முதல்வர் தொகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி டெங்கு காய்ச்சலால் கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். அரசு மருத்துவமனையின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று அப்பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தொகுதி நெல்லித்தோப்பு. இப்பகுதியில் உள்ள கருணாகர பிள்ளை வீதியைச் சார்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ராஜலட்சுமி (23). ராஜலட்சுமிக்கும் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், ஒன்பது மாதக் கர்ப்பிணியான ராஜலட்சுமி, கடந்த இரண்டு மாதங்களாக தனது தந்தை வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட ராஜலட்சுமி நேற்று முன்தினம் ( ஏப்ரல் 5-ம் தேதி) உயிரிழந்தார். குழந்தையும் தாயின் வயிற்றிலேயே இறந்துள்ளது.

இது தொடர்பாக சுப்பிரமணியன் கூறுகையில், "இரு வாரங்களுக்கு முன் என் மகள் ராஜேஸ்வரிக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது. அவருக்கு ராஜீவ் காந்தி மகளிர் பேறுகால மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து வந்தோம். கரோனா அவசரத்தில் ராஜேஸ்வரியின் காய்ச்சலை முறையாகச் சோதனையிடவில்லை. இதில் உச்சகட்டமாக குழந்தை வயிற்றிலேயே இறந்து விட அதை எடுக்கும் வசதியில்லை எனக் கூறி அவசர அவசரமாக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இறந்த குழந்தையை வெளியே எடுத்த பிறகு ராஜேஸ்வரியும் அதிக ரத்தப்போக்கால் இறந்தார்.

கரோனாவைக் காரணம் காட்டி அரசு மருத்துமனையில் மருத்துவர்களும் ஊழியர்களும் அலட்சியமாகச் செயல்பட்டதுதான் இறப்புக்குக் காரணம். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம். கரோனாவை மட்டும் பார்க்காமல் அத்தியாவசிய மருத்துவ சேவைகளையும் உரிய கவனத்துடன் செய்வது அவசியம்" என்று கோரினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x