Published : 07 Apr 2020 08:51 PM
Last Updated : 07 Apr 2020 08:51 PM

பிரச்சினையை மேலும் வளர்க்க விரும்பவில்லை; கரூருக்கு வென்டிலேட்டர் வேண்டும் என்பதே முக்கியம்; முதல்வருக்கு ஸ்டாலின் பதில்

முதல்வர் பழனிசாமி-மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

பிரச்சினையை மேலும் வளர்க்க விரும்பவில்லை எனவும், கரூருக்கு வென்டிலேட்டர் வேண்டும் என்பதே முக்கியம் எனவும் முதல்வருக்கு ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மொத்தம் ஒரு கோடியே 3 லட்சத்து 71 ஆயிரத்து 878 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அத்தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி கடிதம் எழுதியிருந்தார்.

ஒதுக்கப்பட்ட நிதிக்கு முதலில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பின்னர் நிர்வாக அனுமதி ரத்து செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, செந்தில் பாலாஜி தலைமைச் செயலாளரின் கவனத்துக்குக் கடிதம் மூலம் கொண்டு சென்றிருந்தார்.

செந்தில் பாலாஜி வழங்கிய நிதியை ஏன் வாங்கவில்லை என இன்று (ஏப்.7) கேள்வி எழுப்பியிருந்த திமுக தலைவர் ஸ்டாலின், ''உயிர்காக்கும் நேரத்திலும் அரசியல் சூழ்ச்சிகளில் அதிமுக அரசு செயல்படுவது சரியல்ல. முறையான அனுமதி வழங்கி மக்களைக் காக்குமாறு முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக, கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் அனைத்து எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடியைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில், "சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியானது அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்டுத்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது நன்கு அறிந்த தகவலே.

ஆனால், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட மக்கள், கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும், அங்கு போதுமான அளவு வென்டிலேட்டர் வசதி இல்லை என்பதாலும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜி தனது தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்தார்.

இந்நிதியை 28.3.2020 அன்றே மாவட்ட ஆட்சியர் தனது செயல்முறை ஆணை மூலம் ஏற்றுக் கொண்டுவிட்டு பின்னர் 31.3.2020 அன்று மறுத்து ஆணை பிறப்பித்துள்ளார். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டுவிட்டு, பிறகு மறுத்ததில் அரசியல் குறுக்கீடு இருக்கிறது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இந்தப் பிரச்சினையை மேலும் வளர்க்க நான் விரும்பவில்லை. கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தேவையான வென்டிலேட்டர் வசதி செய்து தர உடனடியாக முதல்வர் முன்வந்து அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எந்த நிதியிலிருந்து இதைச் செய்வது என்பது இப்போது முக்கியம் இல்லை; கரூருக்கு வென்டிலேட்டர் வசதிகள் உடனே வேண்டும் என்பதே முக்கியம்!" என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x