Published : 07 Apr 2020 08:22 PM
Last Updated : 07 Apr 2020 08:22 PM
கோவை மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் 43,630 பேருக்கு தலா ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்.7) நடைபெற்ற, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியாவது:
" கோவை மாவட்டத்தில் இதுவரை 300 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை நடத்தியதில், 234 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 64 பேருக்கு நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளதாக பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன. அவர்களில் 5 பேர் சிகிச்சை பெற்று, தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். மீதமுள்ள 59 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்த 4,580 பேரில், 2,248 பேர் நோய் அறிகுறிகள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2,332 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள் 43 ஆயிரத்து 630 பேருக்கு தலா ரூ.1,000 நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 7,928 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் 10 லட்சம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அம்மா உணவகங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது".
இவ்வாறு அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி சார்பில் 16 இடங்களில், ரூ.19.20 லட்சம் மதிப்பில் கிருமிநாசினி சுரங்க நடைபாதை அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக சுந்தராபுரம், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தைகள், உக்கடம், காந்திபுரம் பேருந்து நிலைய தற்காலிக காய்கறிச் சந்தைகளில் இவை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT