Published : 07 Apr 2020 08:11 PM
Last Updated : 07 Apr 2020 08:11 PM
கோவை சூலூர் காவல் நிலையத்தில், இன்று மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார். டிஜிபி உத்தரவிட்ட கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் முறையாகப் பின்பற்றுகின்றனரா, ஊரடங்கை மீறுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து கோவை - திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, காரணம்பேட்டையில் மேற்கொள்ளப்படும் காவல்துறையினரின் கண்காணிப்புப் பணியை ஐஜி பெரியய்யா இன்று (ஏப்.7) ஆய்வு செய்தார். அப்போது காவலர்கள் தங்களுக்குள் சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்றுகின்றனரா, டிஜிபி பிறப்பித்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்கின்றனரா என விசாரித்தார்.
பின்னர், ஐஜி பெரியய்யா செய்தியாளர்களிடம் கூறும்போது, "மேற்கு மண்டல காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில், ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய காரணங்களின்றி சாலைகளில் சுற்றும் நபர்கள் மீது வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து இன்று காலை வரையிலான நிலவரப்படி அத்தியாவசிய காரணங்கள் இன்றி சாலைகளில் சுற்றியதாக மொத்தம் 18 ஆயிரத்து 909 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 20 ஆயிரத்து 726 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 960 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரகத்தில் 11 ஆயிரத்து 273 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 ஆயிரத்து 872 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 9,650 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்தில் 7,636 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9,854 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5,310 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு உணவு முறையாக வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடை வழங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT