Published : 07 Apr 2020 06:27 PM
Last Updated : 07 Apr 2020 06:27 PM

போலி கபசுர குடிநீர் விற்றால் நடவடிக்கை: சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எச்சரிக்கை

சிவகங்கை

‘‘போலி கபசுர குடிநீர் மற்றும் சூரணம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என சிவகங்கை மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் பிரபாகரன் எச்சரித்தார்.

உலக முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

கோவிட்-19 காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் கோவிட்-19 பாதிப்பால் நாளுக்கு நாள் இறப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை சித்தா மருத்துத்துறை பரிந்துரை செய்துள்ளது.

இதையடுத்து தன்னார்வலர்கள், நிறுவனங்கள், பாரம்பரிய மருத்துவர்கள் ஆங்காங்கே கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகித்து வருகின்றனர். இதை பயன்படுத்தி சிலர் போலி கபசுர குடிநீர் சூராணத்தை விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நமது அரசும், பொதுமக்களும் சித்தா மருத்துவ சிகிச்சை மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

தற்போது கபசுர குடிநீரில் 9 வகையான கூட்டு மருந்துகள் உள்ளன. கபசுர குடிநீர் சூராணம் 100 கிராம், 200 கிராம், 500 கிராம் என்ற அளவில் தான் பாக்கெட்டாக விற்பனைக்கு வருகிறது. 20 கிராம், 50 கிராம் பாக்கெட்டாக இருந்தால் அதை வாங்க கூடாது.

மேலும் அந்த பாக்கெட்டில் முறையான முத்திரைகள் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கபசுர குடிநீர் சூராணத்தை சிலர் முறையான அனுமதி பெறாமல் விற்பனை செய்கின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அரசு அனுமதி பெறாமல் சித்தா மருத்துவ சிகிச்சை மேற்கொண்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரித்தார்.

445 ஊராட்சிகளிலும் கபசுர குடிநீர்:

சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகளிலும், அதன் தலைவர்கள் மூலம் கபசுரக் குடிநீர் வழங்க ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் நாளுக்குநாள் உயிரழப்பு அதிகரித்து வருகிறது. தடுப்பு மருந்து இல்லாததால் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் கபசுர குடிநீர் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என சித்தா மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் கபசுரக் குடிநீரை அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் நாட்டு மருந்து கடைகளுக்கு அலைந்து வருகின்றனர். இதை பயன்படுத்தி சிலர் போலி கபசுர குடிநீர் சூராணத்தை விற்பனை செய்கின்றனர்.

இதை தடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகளிலும் ஊராட்சித் தலைவர்கள் மூலம் கபசுர குடிநீர் வழங்க ஆட்சியர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்காக நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர்கள், சித்தா மருத்துவர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராமமக்களுக்கு தினமும் கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் விநியோகிக்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x