Published : 02 Aug 2015 12:36 PM
Last Updated : 02 Aug 2015 12:36 PM
பசும்பொன் தேவரின் உதவியாளர் குருசாமி பிள்ளை கஷ்ட ஜீவனத்தில் இருப்பதாக ‘தி இந்து’வில் வெளியான செய்தியை படித்துவிட்டு, ‘மதுரையில் வந்தே மாதரம் செட்டியாரின் வாரிசுகளும் வறுமையில் வாடுவதாக’ சமூக ஆர்வலர்கள் சிலர் தகவல் அளித்தனர். தேசவிடுதலைக்காக போராடிய அந்த தியாகியின் வாரிசுகளுடைய வாழ்க்கைச் சூழலை பார்த்தபோது அந்த தகவல் சற்றும் மிகையில்லை என்று புரிந்தது.
பாலகிருஷ்ணன் செட்டியார் - மதுரை கீழபெருமாள் மேஸ்திரி வீதியின் மைந்தன். ஆனால், இப்போது பாலகிருஷ்ணன் செட்டியார் என்று சொன்னால் யாருக் கும் தெரியாது. ‘வந்தேமாதரம் செட்டியார்’ என்று சொன்னால் தான் தெரியும். அரசு ஆவணங்களில் கூட அவர் பி.வந்தே மாதரம் செட்டியாராகவே குறிப்பிடப்படுகிறார்.
சுதந்திரப் போராட்டத்தில் சுப்பிரமணிய சிவாவுக்கும், சுப்பிரமணிய பாரதிக்கும் சிஷ்யர் பாலகிருஷ்ணன் செட்டியார். வம்பு தும்புக்குப் போய் பழக்கமில்லாத செட்டியார் குடும்பத்தினருக்கு, இவர் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று கொடிபிடித்துத் திரிந்தது அறவே பிடிக்கவில்லை. ஆனாலும், காங்கிரஸ் அலுவலகமே கதியாய் கிடந்த மகனுக்கு, கணவருக்குத் தெரியாமல் கட்டுச் சோறு கொண்டு போய் கொடுத்தார் பாலகிருஷ்ணன் செட்டியாரின் அம்மா.
மதுரையில் வைத்தியநாத அய்யரோடு ஆலயப் பிரவேசம் செய்ததில் மும்முரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட செட்டியார், சுமார் ஆறரை ஆண்டுகள் சிறைக் கம்பிகளுக்குள் இருந்தவர். வெள்ளைக்கார போலீஸின் லத்திக் கம்புகளுக்கும் வந்தே மாதரம் சொல்லிக் கொடுத்தவர்.
1930 ஏப்ரல் 13-ல் ராஜாஜி திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு உப்புச் சத்தியாக்கிரக யாத்திரை தொடங்கியபோது முன் வரிசையில் நின்றவர். அப்போது நடந்த தடியடியின் போது ‘வந்தேமாதரம்’ என்ற சொல்லைத் தவிர வேறெதையும் உச்சரிக்கவில்லை செட்டியார். இவரது மன உறுதியைப் பார்த்து விட்டு ராஜாஜி இவருக்கு வைத்த பட்டப்பெயர் தான் ‘வந்தேமாதரம் செட்டியார்’. ஆனால், காலம் அதையே அவரது இயற்பெயராக நிலைநிறுத்தி விட்டது.
தேசவிடுதலைக்குப் பிறகு, போராட்டங்களை மறந்து அமைதி வாழ்க்கைக்கு திரும்பினார் வந்தேமாதரம் செட்டியார். இந்தக் காலத்து காங்கிரஸ்காரர்களுக்கு அதுவே வசதியாகிப் போனது;
அவரை ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள். சுதந்திரத்துக்கு கொடி பிடித்ததற் காக அவர் கண்ட பலன் மாநில அரசின் தியாகிகள் பென்ஷன் மட்டுமே. தனது இறுதி நாட்கள் வரை மதுரை நகைக்கடை பஜாரில் கமிஷனுக்கு நகை வாங்கிக் கொடுக்கும் சாமானியராகவே வாழ்ந்த செட்டியார், 1992-ல் கண்ணை மூடினார். அவரது துணை வியார் ராஜலெட்சுமி அம்மாளும் நான்கு வருடங்களுக்கு முன்பு இயற்கை எய்தினார்.
வந்தேமாதரம் செட்டியாருக்கு இரண்டு மகள், இரண்டு மகன்கள். கஷ்டப்பட்டு மகள்களைக் கட்டிக் கொடுத்த அவரால் மகன்களுக்கு ஒரு நல்லவழியைக் காட்ட முடியவில்லை. இதனால் அவர்களும் அரைகுறை படிப்பில், அப்பாவின் தொழிலையே தொடர் கிறார்கள்.
அதுகுறித்து நம்மிடம் பேசினார் அவரது இளைய மகன் வ.மோகன். “நாட்டுக்கு விடுதலை கிடைத்த பிறகு தான் திருமணம் செய்வேன் என்று வைராக்கியமாக வாழ்ந்தவர் அப்பா. எங்களுக்காக அவர் எதையும் சேர்த்து வைத்து விட்டுப் போகவில்லை. அதே சமயம், இந்த நாட்டுக்காக உழைத்த அவரையும் அவரது வாரிசுகளையும் இந்த தேசம் முறையாக அங்கீகரிக்கவில்லை.
அவர் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டு வாழ்க் கையில் முன்னுக்கு வந்திருந்தால் எங்களையும் நல்ல நிலைக்கு கொண்டுவந்திருப்பார். உழைக்க வேண்டிய காலத்தில் போராட்டம், சிறைவாசம் என்று இருந்ததால் அவரது வாரிசுகளான நாங்கள் இப்போது நாதியற்று நிற்கிறோம். நானும் அண்ணனும் கமிஷனுக்கு நகை வாங்கிக் கொடுத்து நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.
எனது மகனுக்கு தியாகிகள் கோட்டாவில் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்திருந்தேன். ஆனால், ‘தியாகிகளின் பிள்ளைகளுக்குத்தான் கோட்டாவில் இடமுண்டு; பேரன்களுக்கு இல்லை’ என்று மறுத்துவிட்டார்கள். நாட்டுக்காக உழைத்தவர்களின் வாரிசுகள் பெரும்பாலனவர்களின் யதார்த்த நிலை இப்படித்தான் இருக்கிறது.” விரக்தியுடன் சொன் னார் மோகன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT