Published : 07 Apr 2020 07:03 AM
Last Updated : 07 Apr 2020 07:03 AM
கரோனா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்ள பிரதமர் மோடி, நாட்டின் முன்னணி ஆயுர்வேத மருத்துவர்களுடன் சமீபத்தில் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். இதில் கோவை ஆர்ய வைத்திய ஃபார்மஸி தலைவர் டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமாரும் பங்கேற்று பல்வேறு யோசனைகளை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தற்போது நமது வாழ்க்கை முறைமாறி, தேவையற்ற உணவுகளை தவறான நேரத்தில் சாப்பிடுகிறோம். ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் விழித்துக் கிடக்கிறோம். சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நேரத்தில் உறங்குகிறோம். எனவே,நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது அவசியம்.
அதிகாலையில் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவது, கீரை, காய்கறி வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது என நமது முன்னோர் வகுத்தப் பாதையில் பயணித்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கிருமி தாக்குதலில் இருந்து தப்பலாம். நுரையீரல் வலிமையாக இருந்தால், கரோனா வைரஸ் பாதிப்பு இருக்காது. இன்றைய நெருக்கடி நாட்களில் துளசி, ஜீரகம் கலந்த நீரையும், சுடுநீரையும் பருகுவது உடலுக்கு உகந்தது.
சமீபத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுடன் பிரதமர் மோடி உரையாடியபோது, நமது பாரம்பரிய மருத்துவ முறைகள், மூலிகை வைத்தியம் குறித்து மாணவ - மாணவியருக்கு கற்றுத்தர வேண்டும். அட்டவணைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்த வேண்டும். கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடத்த சித்தா மற்றும் ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளுடன், ஆங்கில மருத்துவம் பயின்றவர்களையும் இணைத்து உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்திஉள்ளோம். இது தொடர்பாக உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்
இதேபோல, கேரள மாநிலமுதல்வரிடமும் பேசியுள்ளோம். கரோனா வைரஸ் பாதிப்புகளைத் தடுப்பது தொடர்பாக ஒருஅறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக கேரள முதல்வரும் உறுதியளித்துள்ளார்.
இதுவரை ஆங்கில மருத்துவத்தினால் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல்வேறு மாற்று மருத்துவ முறையில் ஆய்வுகளை மேற்கொண்டால், நிச்சயம் வைரஸை தடுக்கும் மருந்து கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.
இந்திய பாரம்பரிய வைத்திய முறைகளை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வை வெளிநாட்டோருக்கு ஏற்படுத்துவதன் மூலம், இந்திய மருத்துவத் துறை மேலும் வளர்ச்சியடைந்து, பொருளாதாரரீதியாகவும் பலன் கிடைக்கும் என குறிப்பிட்டோம். நாடு முழுவதும் உள்ள சித்தாமற்றும் ஆயுர்வேத மருத்துவர்களை கரோனா தடுப்புப் பணிகளில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளோம். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை மாணவ -மாணவியருக்கு இலவசமாக கற்றுத் தர, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்கு உதவ அரசு கேட்டுக் கொண்டால், ஒத்துழைப்பு தர தயாராக உள்ளோம். மேலும், கரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் எங்கள் பார்மஸி சார்பில் 30 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கியுள்ளோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT