Published : 06 Apr 2020 08:51 PM
Last Updated : 06 Apr 2020 08:51 PM
கரோனா வைரஸ் பீதி, ஊரடங்கு, மதுக்கடைகள் மூடல் ஆகிய காரணங்களால் உளவியல் சிக்கல் ஏற்படுவோருக்கு, மனநல நிபுணர்கள் தொலைபேசியில் இலவசமாக ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
உலகையே ஆட்டிப் படைத்து வரும் கரோனா தமிழ்நாட்டிலும் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு 21 நாள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் தொடர்ந்து வீட்டில் முடங்கிக் கிடக்கும் இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதனால் அவர்களிடையே பதற்றம், பயம், கோபம் உள்ளிட்ட உளவியல் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
மக்களின் மனநலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மருத்துவ உளவியல் சங்கத்தினர் புது முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளனர்.
கரோனாவால் ஏற்படும் மனச் சிக்கல்களைக் களைந்து, மக்களுக்கு ஆலோசனை வழங்க தகுதிவாய்ந்த, சட்டபூர்வ உரிமம் பெற்ற, இந்திய மனநல சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ உளவியல் நிபுணர்கள் 70 பேர் முன்வந்துள்ளனர். அவர்களின் தொலைபேசி எண்கள் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து உளவியல் சிகிச்சை அளித்துவரும் மருத்துவ உளவியல் நிபுணர்களில் ஒருவரான வந்தனா நம்மிடம் பேசினார்.
''கரோனா எப்போது முடியும் என்ற சந்தேகம், கணவன் -மனைவி இடையே சண்டை, குழந்தைகள் வெறுமையை உணர்வது, மன அழுத்தம் ஆகியவை அதிகரித்திருக்கின்றன. வீட்டிலேயே இருப்பதால் மக்களுக்கு ஒருவித சோர்வு ஏற்படுகிறது. உணவு, உறக்கச் சங்கிலியும்கூட சரியான நேரத்தில் நடப்பதில்லை. இதுவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அதேபோல மதுக்கடைகள் தற்போது மூடப்பட்டுள்ளதால் தொடர்ந்து மது அருந்தி வந்தவர்களுக்கு கோபம், எரிச்சல் பதற்றம் ஏற்படுகிறது. இப்போது மது அருந்த வாய்ப்பே இல்லாததால், விடவேண்டிய சூழலில் ஃபிட்ஸ் வரவும் வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்கும் ஆலோசனை அளிக்கிறோம்.
தற்போது வழக்கமான குழந்தைகளைக் கையாள்வதே சிரமமாகி இருக்கும் சூழலில், சிறப்புக் குழந்தைகளைக் கையாள்வதில் அதிக சவால்கள் இருக்கும். அவர்களுக்கு, அதேபோல தற்கொலை எண்ணம் தலைதூக்குபவர்களுக்கு என அனைத்து விதமான உளவியல் சிக்கல்களுக்கும் எங்களிடத்தில் ஆலோசனை உண்டு.
எங்களைத் தொடர்பு கொள்பவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் நாங்கள் தொலைபேசி மூலமாக இலவசமாகவே ஆலோசனை வழங்கி வருகிறோம். முழுமையான மருத்துவ சிகிச்சை என்றில்லாமல், உடனடி ஆதரவு சிகிச்சை அளிக்கிறோம்'' என்கிறார் மனநல நிபுணர் வந்தனா.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தது 2 முதல் 8 மனநல நிபுணர்கள் ஆலோசனை வழங்கிவருகின்றனர். தேவை உள்ள அனைத்து மக்களும் எவ்விதத் தயக்கமும் இன்றி இந்த இலவச மனநல ஆலோசனையைப் பெற்றுப் பயனடையுமாறு 'இந்து தமிழ் திசை' கேட்டுக்கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT