Published : 06 Apr 2020 06:47 PM
Last Updated : 06 Apr 2020 06:47 PM
ஊரடங்கு உத்தரவினால் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கெட்டிமேளம், விருந்து, மொய் உள்ளிட்ட சம்பிரதாயம் எதுவும் இன்றி எளியமுறையில் திருமணம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளம் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். எம்பிஏ பட்டதாரி. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் உறவுக்காரப் பெண் பாரதிக்கும் இன்று தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதி கிடைக்கவில்லை.
எனவே பெரியகுளம் பகவதி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் என 10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
இது குறித்து மணமக்களின் பெற்றோர் கூறுகையில், உறவினர்கள் சூழ திருமணத்தை சிறப்பாக நடத்த திட்டமிட்டிருந்தோம். ஊரடங்கு என்பதால் வெளியூரில் இருந்து யாருமே வர முடியாத சூழல் ஏற்பட்டது.
நல்லகாரியத்தை தள்ளிவைக்கக் கூடாது என்று சிறிய கோயிலில் திருமணத்தை நடத்தினோம். விருந்தை வீட்டிலே சமைத்து சாப்பிட இருக்கிறோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT