Published : 06 Apr 2020 06:30 PM
Last Updated : 06 Apr 2020 06:30 PM
இந்தோனேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்து ராமநாதபுரம் மாவட்ட பள்ளிவாசல்களில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட 8 பேர் மீதும், அவர்களுக்கு உதவிய 3 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்தோனேsiயா நாட்டைச் சேர்ந்த கணவன், மனைவியான 4 தம்பதிகள் தப்லீக் ஜமாத் தொழுகை முறையை போதிப்பதற்காக இந்தியா வந்துள்ளனர்.
இவர்கள் கடந்த மார்ச் 8-முதல் 23-ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிவாசல்களில் தொழுகை முறையை போதித்துவிட்டு, 24-ம் தேதி ராமநாதபுரம் பாரதிநகர் மதரஸா பள்ளிவாசலுக்கு வந்தனர்.
அவர்களை கேணிக்கரை போலீஸார் விசாரணை செய்து, சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்ததும், அவர்கள் தங்கியிருந்த பாரதிநகர் வீட்டில் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் பட்டணம்காத்தான் கிராம நிர்வாக அலுவலர் செல்வம் புகாரின்பேரில், இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஜெய்லாணி(42), இவரது மனைவி சித்தி ரொகானா(45), ரமலன் பின் இபுராகீம்(47), இவரது மனைவி அமன் ஜகாரியா(50), முகம்மது நஷீ்ர் இபுராகீம்(50), இவரது மனைவி ஹமரியா(55), மரியோனா(42), இவரது மனைவி சுமிஷினி(43) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த மூமின் அலி, ராமநாதபுரம் பாரதிநகரைச் சேர்ந்த அசரப் அலி, முகம்மது காசீம் ஆகியோர் மீது கேணிக்கரை போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் கூறியதாவது, இந்தோனேஷியாவைச் சேர்ந்த 8 பேரும் சுற்றுலா விசாவில் வந்து, இந்திய அரசின் அனுமதியின்றி மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் அவர்கள் மீது பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டினர் சட்டப்பிரிவுகள், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளிலும் மற்றும் அவர்களுக்கு உதவிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT