Published : 06 Apr 2020 04:00 PM
Last Updated : 06 Apr 2020 04:00 PM

ஏப்ரல் 14-க்குப் பிறகு எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள்: வெளிப்படையாக அறிவிக்க பிரதமருக்கு திருமாவளவன் வேண்டுகோள்

பிரதமர் மோடி - தொல்.திருமாவளவன்: கோப்புப்படம்

சென்னை

ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகளைப் பற்றி மக்களுக்கு பிரதமர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தொல்.திருமாவளவன் இன்று (ஏப்.6) வெளியிட்ட அறிக்கையில், "21 நாள் முழு அடைப்பு முடிந்து ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு என்ன செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படையாக மத்திய அரசு இப்போதே மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கு மக்களை தயார்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும் என்று பெரும்பாலான மக்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் ஊர் திரும்பி விடலாம் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

பாதியிலேயே தேர்வுகள் ஒத்திப் போடப்பட்ட மாணவர்கள் தங்கள் தேர்வுகளை முடிப்பதற்காக பதற்றத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால், மே , ஜூன் மாதங்களில்தான் கரோனா தொற்று பெருமளவில் இந்தியாவில் இருக்கும் என்று பல்வேறு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துக்கொண்டிருக்கின்றனர்.

எனவே, ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு இயல்பு வாழ்க்கை முழுவதும் திரும்புமா அல்லது மேலும் இந்த தடை நீட்டிக்கப்படுமா என்பதைப் பற்றியெல்லாம் தெளிவான விளக்கத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். நாளை பிரதமர் தலைமையில் நடத்தப்படவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதைப் பற்றி விரிவாக விவாதித்து, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலான செயல் திட்டத்தை வரையறுக்க வேண்டும்.

இந்தியாவில் கரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு 16 லட்சம் டெஸ்டிங் உபகரணங்களும் 50 ஆயிரம் வெண்டிலேட்டர்களும், 27 லட்சம் எண்-95 முகக் கவசங்களும் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இப்போதே வெண்டிலேட்டர்கள் மற்றும் முகக் கவசங்களின் பற்றாக்குறை ஆங்காங்கே வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

36 ஆயிரம் வெண்டிலேட்டர்களை வெளிநாடுகளில் இருந்து தருவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்ற செய்திகள் வந்தாலும் அவை எப்போது கிடைக்கும் என்பதைப் பற்றி தெளிவான தகவல் எதுவும் இல்லை.

சமூகப்பரவல் என்ற மூன்றாவது கட்டத்தை இந்த தொற்று எட்டுமேயானால் அதை சமாளிப்பதற்கு எவ்வித தயாரிப்பும் இல்லாத நிலையிலேயே மத்திய அரசும் மாநில அரசுகளும் இருக்கின்றன. இது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, நமக்குத் தேவைப்படும் முகக் கவசங்கள், சோதனைக் கருவிகள், வெண்டிலேட்டர்கள், மருத்துவமனை படுக்கைகள் எவ்வளவு? தற்போது தயார் நிலையில் இருக்கும் எண்ணிக்கை எத்தனை ? இதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பதைப் பற்றி மக்களுக்கு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரதமரை கேட்டுக்கொள்கிறோம்.

அடுத்து, ஊரடங்கு காலம் நீட்டிக்கப்படுமானால் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதை சமாளிப்பதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் விவசாயப் பணிகளைத் தொடங்கவும், உணவுப்பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், நாடு முழுவதும் தங்கு தடையின்றி மளிகைப் பொருட்கள் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைப்போல தேர்வுகள் குறித்து மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு உடனடியாக பொதுப் போக்குவரத்து தொடங்கப்படுமா? பேருந்துகள் இயக்கப்படுமா? என்பது மக்களிடையே எழுந்துள்ள கேள்வியாகும். எனவே, அதைப் பற்றியும் நாளைய கூட்டத்துக்குப் பிறகு பிரதமர் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

கடந்த முறை திடுதிப்பென்று 21 நாட்கள் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டதால்தான் அன்றாட வாழ்வில் மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அதுபோல இல்லாமல் படிப்படியாக அறிவித்து மக்களை தயார்படுத்தி, மக்களுடைய முழுமையான ஒத்துழைப்போடு எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

பிரதமரே இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிற நிலையில், தமிழக முதல்வரும் உடனடியாக இங்கே அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்" என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x