Published : 06 Apr 2020 03:49 PM
Last Updated : 06 Apr 2020 03:49 PM
ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நரிக்குறவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நரிக்குறவர்கள் நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
ஊரடங்கு உத்தரவு என்றாலே மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல மட்டும்தான் அனுமதி. மற்ற இடங்களுக்கு செல்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
இந்த விதி அனைவருக்கும் பொருந்தும். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை முத்துநகர் என்ற பெயரில் ஒரு செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதில் அவசரத் தேவைகளுக்காக வெளியூர் செல்ல உள்ளவர்கள் அதற்குரிய காரணத்துடன் விண்ணப்பித்தால், அனுமதி வழங்கப்படும்.
அதேபோல் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அந்தந்த நிர்வாகமே ஊதியங்களை வழங்கி வருகின்றன. இதுதொடர்பாக புகார் எதுவும் இருந்தால் சம்பந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
கரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் தான் அதிகமாக உள்ளது. ஜாதி, மதம் பார்த்து நோய் வருவதில்லை. மனித இனமே பாதிக்கப்படும் நேரத்தில், இதில் அரசியலையோ மதத்தையோ கலந்தால் நன்றாக இருக்காது. உலகளாவிய மனித இனத்தை காக்கும் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள். ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர். இவர்கள் அனைவரும் பரிசோதனையின் மூலம் கண்டறியப் படுகின்றனர். அவர்கள் யார் என்பதை நாம் முடிவு செய்வதில்லை. பரிசோதனை அறிக்கை தான் முடிவு செய்கிறது. அதிலும் அவர்கள் யார் எந்தப் பிரிவு, மதத்தை சேர்ந்தவர்கள் என அரசு பார்ப்பதில்லை. மனிதாபிமானத்தோடு அரசு செயல்பட்டு அவர்கள் யாராக இருந்தாலும் நோயிலிருந்து விடுபட தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையோடு தைரியத்தோடு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதைத்தான் தற்போது நாம் பார்க்க வேண்டும்.
ஒரு வைரஸ் கிருமி மூலம் உலகத்துக்கு பேரிடர் வந்துள்ளது. இதிலிருந்து நாம் எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். இதில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் ஒருவர் கூட உயிர் இழக்கக் கூடாது என்றுதான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT