Published : 06 Apr 2020 01:25 PM
Last Updated : 06 Apr 2020 01:25 PM

லட்சக்கணக்கானோர் குவியும் பங்குனி உத்திர விழா நாளில் களையிழந்த பழநி நகரம்: கோயில் வரலாற்றில் முதன்முறையாக தேரோட்டம் ரத்து

திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரம் பங்குனி உத்திரதிருவிழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூணவேண்டிய நிலையில் வெறிச்சோடி காணப்படுகிறது.

பழநி

பழநி பங்குனி உத்திரதிருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை (06-04-2020 திங்கள் கிழமை) நடைபெறவிருந்த நிலையில் ஊரடங்கால் விழா ரத்து செய்யப்பட்டது.

கோயில் வரலாற்றில் பங்குனி உத்திர விழா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது இதுவே முதன்முறை என்கின்றனர். காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை வழிபட இருந்த பக்தர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற விழாக்களில் பாதயாத்திரைக்கு புகழ்பெற்ற தைப்பூசம், காவடிக்கு புகழ்பெற்ற பங்குனி உத்திரவிழா ஆகியவை முக்கியமானவை.

இந்த இரண்டு விழாக்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி முருகப்பெருமானை வழிபடுவர்.

இந்த ஆண்டிற்கான தைப்பூச விழா நடந்துமுடிந்தநிலையில், பங்குனி உத்திரத்திருவிழா கடந்த மார்ச் 31 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. விழாதொடங்கியது முதலே பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து முருகப்பெருமானை தரிசித்து செல்வர்.

சுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதனால் பழநி நகரமே விழாக்கோலமாக காணப்படும். இந்த ஆண்டு பங்குனி உத்திரதிருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (06-04-2020 திங்கள்கிழமை) மாலை நடைபெறுவதாக இருந்தது.

விழா தொடங்கும் முன்னரே கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கொடியேற்றம் நடைபெறவில்லை. இருந்தபோதும் ஆறு காலபூஜைகள் மட்டும் வழக்கம்போல் சுவாமிக்கு நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த காவடி எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தி முருகப்பெருமானை குளிர்விக்க லட்சக்கணக்கானோர் குவியும் நாளான இன்று பழநி நகரமே விழாக்கோலம் காணவேண்டிய நிலையில் வெறிச்சோடிக்காணப்பட்டது.

தேரோட்டம் நடைபெறும் கிரிவீதியில் ஆட்கள் நடமாட்டமே இல்லாதநிலை உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் லட்சக்கணக்கானோர் குவிந்த நிலையில் இன்று ஆள் அரவம் இன்றி உள்ளது.

கோயில் வரலாற்றில் இதுபோன்று திருவிழா முற்றிலும் ரத்துசெய்யப்பட்ட சம்பவம் நாங்கள் அறிந்து நடந்திராத ஒன்று என பழநியை சேர்ந்த முதியவர்கள் தெரிவிக்கின்றனர். பங்குனி உத்திரதிருவிழாரத்துசெய்யப்பட்டுள்ளது பக்தர்கள் பலரையும் மனமுடையச்செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x