Published : 06 Apr 2020 01:23 PM
Last Updated : 06 Apr 2020 01:23 PM
தேசிய சராசரியை விட தமிழகத்தில் கரோனா பரிசோதனை குறைவாக மேற்கொள்ளப்படுவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஏப்.6) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா என்கிற கொடிய தொற்றுநோயை எதிர்த்து இந்தியா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் போராடிக்கொண்டிருக்கின்றன. கரோனா ஒரு சர்வதேச நோயாக அனைத்து மக்களையும் வாட்டி வதைத்து வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீன நாட்டில் கரோனா நோய் தென்படத் தொடங்கியது. அதன் பாதிப்பு ஜனவரி இறுதியில் இந்தியாவை தாக்கத் தொடங்கியது. இன்றைய உலக நாடுகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைக்கப்பட்ட நிலையில் கரோனா நோய் பரவல் குறித்து சீனாவில் பாதிப்பு ஏற்பட்டபொழுதே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது.
'நமஸ்தே ட்ரம்ப்' வரவேற்பில் காட்டிய தீவிரத்தை கரோனா தடுப்பு நடவடிக்கையில் காட்டுவதற்கு பிரதமர் மோடி முற்றிலும் தவறிவிட்டார். இந்தியாவை அச்சுறுத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கை எடுப்பதில் காட்டிய அலட்சியப் போக்கை மூடி மறைத்து திசை திருப்பவே முதலில் மக்களை கை தட்டச்சொன்னார். பிறகு விளக்கை அணைத்து ஒளியை ஏற்றச்சொன்னார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கரோனா நோயை பரிசோதிக்க உரிய கொள்கையை வகுக்காததால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள 92 அரசு பரிசோதனை ஆய்வகங்களில் 17 ஆயிரத்து 493 பேருக்குதான் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
குறைவான பரிசோதனை ஆய்வகங்கள் இருப்பதால் கரோனா தொற்று நோயின் பாதிப்பை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்து தமிழகம் கடும் பாதிப்புக்கு உள்ளாயிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி வரை 4,612 பேருக்குதான் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கரோனா நோய் இருக்கிறதா, இல்லையா என்கிற பரிசோதனை நடத்தப்படாமல் மிகுந்த அச்சம், பீதியோடு இருந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் செயற்கை சுவாசக் கருவிகள் 3,371 தான் உள்ளன. மத்திய அரசை மருத்துவக் கருவிகள் வாங்க ரூபாய் 3,000 கோடி கேட்டதில் இதுவரை எந்த பதிலும் இல்லை.
தமிழகத்தை விட கேரள மாநிலத்தில் அதிக அளவு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் 10 லட்சம் மக்கள் தொகையில் 38 பேருக்குதான் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால், கேரளாவில் 220 பேருக்கு செய்யப்படுகிறது. தேசிய சராசரியாக 42 பேருக்கு சோதனை செய்யப்படுகிறது.
ஆனால், தேசிய சராசரியை விட குறைவாக 38 பேருக்கு செய்யப்படுவது தமிழகம் எந்த அளவுக்கு கரோனா பரிசோதனையில் பின்தங்கி இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. தமிழகத்தில் 11 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவமனைகளிலும் ஆக மொத்தம் 17 பரிசோதனை ஆய்வகங்கள்தான் இருக்கின்றன.
இவை சென்னையைச் சுற்றிலும் 7 ஆய்வகங்கள்தான் அமைந்திருக்கின்றன. இதிலும் கிராமப்புற மக்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர்.
சென்னை, மதுரை, கோவை மாநகரங்களில் சர்வதேசத் தரம் வாய்ந்த தனியார் மருத்துவமனைகள் உள்ளன. கரோனா நோய் தடுப்பு சிகிச்சையில் அரசு மருத்துவமனைகள்தான் பெரும்பங்கை ஆற்றி வருகின்றன. ஆனால், தமிழகத்தின் மருத்துவ வசதிகளில் தனியார் துறையின் ஆதிக்கம் இருப்பதைப் புறக்கணிக்க முடியாது.
பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதில் தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசின் அனுமதியை தமிழக அரசு பெற வேண்டும்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தடுப்புப் பணியில் சுகாதாரத்துறை அமைச்சர் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். கரோனா நோயை எதிர்த்து சுகாதாரத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், பணியாளர்கள், தங்களை நோய் தொற்றிவிடும் என்கிற கவலை கடுகளவும் இல்லாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.
ஆனால், தலைநகர் சென்னையில் இருந்து கரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டிய சுகாதார அமைச்சர் சமீபகாலமாக பார்வையில் தென்படாமல் இருக்கிறார். இச்சூழலில் நேற்று மாலை புதுக்கோட்டையில், தமது வீட்டில் அகல் விளக்கை ஏற்றியிருக்கிறார்.
ஆனால், சமீபகாலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துக்கொண்டிருந்த அமைச்சருக்குப் பதிலாக சுகாதாரத்துறைச் செயலாளர் சந்தித்து வருகிறார். இத்தகைய திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்க வேண்டும். மத்திய அரசின் அனுமதியோடு பரிசோதனைக் கருவிகள், சுவாசக்கருவிகள், முகக்கவசங்கள், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் உடனடியாகப் பெறுவதற்கு தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தமிழக மக்களை அச்சுறுத்தி, பீதியில் ஆழ்த்தி வருகிற கரோனா தடுப்பு சிகிச்சையில் சில குறைபாடுகள் இருப்பதை ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற முறையில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT