Published : 06 Apr 2020 12:06 PM
Last Updated : 06 Apr 2020 12:06 PM

டெல்லி சென்றதை மறைத்து மலேசியா தப்ப முயன்ற 10 பேர் கைது: பேரிடர் மேலாண்மைச் சட்டம் பாய்ந்தது

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்ததை மறைத்து மலேசியா தப்ப முயன்ற 10 மலேசியர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழகத்தில் சிக்கிய மலேசியர்களை அங்கு அனுப்பும் முயற்சியில் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு அனுப்பப்படும் பயணிகளுடன் டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து தப்பி மலேசியாவுக்கு செல்ல முயன்ற 10 மலேசியர்கள் சிக்கினர்.

கரோனா வைரஸ் பீதி காரணமாக நாடு முழுவதும் உள்நாடு மற்றும் சா்வதேச விமான சேவைகள் வரும் 14 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் மலேசியா நாட்டவா்கள் பலா் இந்தியாவில் சிக்கிக்கொண்டனா்.குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவு மலேசியா்கள் தவிக்கின்றனா்.

மலேசியா அரசு இந்திய அரசுடன் பேசி தங்கள் நாட்டவரை தனி சிறப்பு விமானங்களில் மலேசியா அழைத்து செல்ல அனுமதி கேட்டது.இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி அளித்தது.

அதன்பேரில் கடந்த வெள்ளிக்கிழமை மலேசியாவிலிருந்து மலிண்டா ஏா்லைன்ஸ் 2 விமானங்கள் சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு காலி விமானங்களாக வந்தன.சென்னை,சென்னை புறநகா் மற்றும் வடமாவட்டங்ளிலிருந்த மலேசியா்கள் 344 பேரை ஏற்றிச் சென்றது.

நேற்றும் சென்னையிலிருந்து காலை 10.40 மணிக்கு மலேசியா தலைநகா் கோலாலம்பூருக்கு பாடிக் ஏா்லைன்ஸ் என்ற சிறப்பு தனி விமானம் புறப்பட்டு சென்றது. அதில் தமிழகத்தில் தங்கியிருந்த 127 மலேசியா்கள் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படவிருந்தனா்.

இவ்வாறு செல்லவிருந்த 127 பேரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிக்கியிருந்த மலேசியர்கள் ஆவர். அவர்கள் சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு நேற்று காலை அழைத்து வரப்பட்டனர். அவா்கள் அனைவருக்கும் விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை நடந்தது.

அப்போது சிலர் பாஸ்போர்ட்டை சோதித்தபோது அதில் 10 மலேசியா்கள் டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்ள சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியாவிலிருந்து இந்தியா வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தெரிந்துக்கொண்ட அந்த 10 மலேசியர்களும் தாங்கள் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பதை மறைப்பதற்காக டெல்லியிலிருந்து நேராக திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் சென்று அங்கிருந்து சாலை வழியாக தமிழகத்தில் உள்ள தென்காசிக்கு வந்து தங்கியிருந்துள்ளனா்.

டில்லி மாநாட்டில் கலந்து கொண்டதை மறைத்து, தென்காசியிலிருந்து வருவதாக தவறான தகவலை அளித்து மலேசியா நாட்டு தூதரகம் மூலம் சென்னை வந்து, எந்தவித மருத்துவ பரிசோதணை மற்றும் தனிமைப்படுத்துதல் எதுவும் இல்லாமல் தங்கள் நாட்டிற்கு செல்ல முயன்றனர்.

சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் அவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை சோதித்தபோது இதை விசாரணை மூலம் கண்டுப்பிடித்தனா். இதையடுத்து அந்த 10 போ் பயணத்தை உடனடியாக அதிகாரிகள் ரத்து செய்தனா்.

அவா்கள் தவிர மீதமிருந்த 117 மலேசியர்களுடன் விமானம் மலேசிய செல்ல அனுமதிக்கப்பட்டது. டெல்லிச் சென்றதை மறைத்து மருத்துவ பரிசோதனை எதற்கும் உட்படாமல் மலேசியா செல்ல முயன்ற 10 பேரையும் குடியுரிமை அதிகாரிகள், வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர்களை பரிசோதிக்கவும் தனிமைப்படுத்தவும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக பொது சுகாதாரத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் 10 பேரையும் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவர்கள்மீது 188, 269, 270, 271 IPC, sec 3 of The Epidemic Diseases Act 1897, 134 &135 of TN Public Health Act 1939, 51(b) of National Disaster Management Act 2005 r/w sec 13&14 of Foreigners Act. பேரிடர் மேலாண்மைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்து 10 நபர்களையும் பூந்தமல்லி அரசு சுகாதார நிறுவனத்தில் (IPH) நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக திருவனனந்தபுரம் வந்த அவர்கள் எங்கு தங்கினர், சாலை மார்கமாக தென்காசிக்கு எந்த வாகனத்தில் வந்தனர், தென்காசியில் எங்கு தங்கியிருந்தனர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து பொது சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x