Published : 06 Apr 2020 10:51 AM
Last Updated : 06 Apr 2020 10:51 AM
கரோனா ஒழிப்பில் மும்முரமாய் இருக்கும் பிரதமர் மோடி, கரோனாவுக்கு எதிரான மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக நேற்றிரவு 9 மணிக்கு அனைவரும் தங்களது இல்லங்களில் மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்றும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்குக் கலவையான விமர்சனங்கள் வெளியான நிலையில், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் தம்பதியர், பிரதமரின் வேண்டுகோளுக்கு வித்தியாசமான முறையில் வலுசேர்த்தார்கள்.
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலத்தை சேர்ந்த சித்திரைவேலு - வசந்தா என்ற அந்த ஆசிரிய தம்பதியர் அவ்வப்போது சமூக அக்கறையோடு பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பிரதமரின் விளக்கேற்றும் வேண்டுகோளுக்கு வலுசேர்க்கும் விதமாக இவர்கள் நேற்று வேதாரண்யம் மேலவீதியில் ‘கரோனா விழிப்புணர்வு மலிவுவிலைக் கடை’ என்ற பெயரில் தற்காலிக தரைக்கடை ஒன்றை அமைத்தனர். அந்தக் கடையில் காகிதப் பைகள் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன. அந்தப் பைகளில், விளக்கேற்றத் தேவையான அகல் விளக்கு, திரிநூல் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் கிருமிநாசினியான மஞ்சள்தூள் ஒரு பாக்கெட்டும் ஒரு முகக் கவசமும் இருந்தன. இந்தக் கடையில் வியாபாரம் செய்ய ஆட்கள் யாரும் இல்லை. தேவையானவர்கள் இருபது ரூபாயை அங்கிருந்த டப்பாவில் போட்டுவிட்டு பையை எடுத்துச் செல்லும்படி வைத்திருந்தார்கள்.
இதுகுறித்து இந்து தமிழ் திசை இணையதள செய்திப் பிரிவிடம் பேசிய ஆசிரிய தம்பதியர், “நாங்கள் வைத்திருந்த விளக்குப் பையின் அடக்க விலை 35 ரூபாய். ஆனால், கரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டு என்பதற்காகவும், பிரதமர் விடுத்த வேண்டுகோளை மக்கள் நிறைவேற்ற வசதியாகவும் ஒரு பையை 20 ரூபாய்க்குத் தந்தோம். நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக மக்கள் ஆர்வத்துடன் வந்து பைகளை எடுத்துச் சென்றனர். மறக்காமல் அத்தனை பேரும் அதற்கான பணத்தை டப்பாவில் போட்டுச் சென்றிருக்கிறார்கள்.
மக்கள் வருவார்களோ மாட்டார்களோ என்ற தயக்கத்தில் 500 பைகள் மட்டும் தான் தயார்படுத்தி வைத்திருந்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக, அத்தனை பைகளையும் மக்கள் ஆர்வத்துடன் எடுத்துச் சென்றதைப் பார்த்ததும் எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. இப்படித் தெரிந்திருந்தால் இன்னும் கூடுதலாக 500 பைகளை சேர்த்து வைத்திருப்போம்” என்றார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT