Published : 06 Apr 2020 09:56 AM
Last Updated : 06 Apr 2020 09:56 AM
நாட்டு மக்களுக்கு பயனுள்ள உதவிகளை செய்ய பிரதமர் மோடி முன்வர வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நேற்று (ஏப்.5) இரவு 9 மணிக்கு தனது வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு வீட்டு மாடியில் உள்ள மாடத்திற்கு வந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு 9 நிமிடங்கள் நின்றிருந்தார்.
இதனையடுத்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நானும் புதுச்சேரி மக்களும் தங்களின் ஒற்றுமையை காட்டியுள்ளார்கள். நாட்டு மக்கள் அனைவரும் தேசபக்தியுடன் ஒற்றுமையாக உள்ளார்கள்.
கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்திய மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் யோசிக்க வேண்டும். நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு உள்ளது. விளக்கு ஏற்றுவதாலோ கைதட்டுவதாலோ இந்த நோய்க்கு தீர்வு காண முடியாது. நாங்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டியதில்லை.
கரோனா நோய் சிகிச்சைக்கு வெண்டிலேட்டர் உள்ளிட்ட எந்தவித மருத்துவ உபகரண பொருட்களும் கிடைக்கவில்லை. இவை எல்லாம் கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிவாரணத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும்.
அதேபோல், மாநிலங்களுக்கான நிதியையும் அளிக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி பொருளாதார நிபுணர்களை கலந்தாலோசிக்க வேண்டுமே தவிர அறிவிப்புகளால் எந்தவித பலன்களும் இல்லை.
கரோனா தாக்கத்தால் பல்வேறு மாநிலங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. இந்த நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதோடு பொருளாதார மேதைகளை கலந்தாலோசித்து வீழ்ந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை பிரதமர் மோடி முதலில் செய்ய வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT