Published : 06 Apr 2020 07:31 AM
Last Updated : 06 Apr 2020 07:31 AM
மது கிடைக்காததால், மரத்தில் பூசப் பயன்படுத்தும் வார்னிஷை குளிர்பானத்தில் கலந்து குடித்த கார் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருந்தகங்கள், உணவகங்கள், மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்டவை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மது கிடைக்காததால் சிலர் குளிர்பானத்தில் எரிசாராயம் உள்ளிட்டவற்றை கலந்து குடித்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சம்பவம் செங்கல்பட்டிலும் நிகழ்ந்துள்ளது.
செங்கல்பட்டில் ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் சிவசங்கர் (32), சிங்கபெருமாள் கோயில், திருத்தேரி பகுதியை சேர்ந்தவர் பிரதீப்(32) இவர்கள் இருவரும் செங்கல்பட்டு அருகே உள்ள ஒத்திவாக்கம் பகுதியில் கேட் கீப்பராக வேலை செய்து வந்தனர். படப்பை அருகே கரசங்கால் பகுதியை சேர்ந்த சிவராமன் (30) கார் ஓட்டுநர். இவர்கள் 3 பேரும் நண்பர்கள்; தினமும் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் இவர்கள் அவற்றை கள்ளச் சந்தையில் வாங்கி குடித்து வந்தனர்.
போலீஸாரின் கெடுபிடி காரணமாக கள்ளச் சந்தையிலும் மது கிடைக்கவில்லை.
இந்நிலையில், மதுவுக்கு அடிமையான இம்மூவரும் செங்கல்பட்டு ரயில்வே குடியிருப்பு பகுதியில் உள்ள காலி மைதானத்தில் நேற்று இரவு அமர்ந்து, மரத்தில் பூசப் பயன்படுத்தப்படும் வார்னிஷ் திரவத்தில் குளிர்பானத்தை கலந்து குடித்துள்ளனர். இதனால் 3 பேருக்கும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே மூவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர், சிகிச்சை பலனளிக்காமல் சிவசங்கர், பிரதீப், சிவராமன் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏற்கெனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்த 3 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT