Published : 05 Apr 2020 07:30 PM
Last Updated : 05 Apr 2020 07:30 PM
ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி களியக்காவிளையில் காய்கறி வாகனத்தில் கேரளாவிற்கு கடத்தி விற்க முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா, மற்றும் புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
குமரி மாவட்டம் கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சோதனை சாவடி வழியாக கேரளாவிற்கு பான் மசாலா, குட்கா, மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டு அடிக்கடி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு நேரத்தில் மதுக்கடை செயல்படாததால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, புகையிலை பொருட்களை பதுக்கி பன்மடங்கு லாபத்தில் கேரள எல்லை பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. இதைப்போல் கேரளாவிற்கும் வாகனங்களில் கடத்தி செல்லப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் நேற்று போலீஸார் களியக்காவிளை, மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மூட்டைகளில் இருந்த குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கி வைத்து கேரளாவிற்கும், பிற பகுதிகளுக்கும் கடத்தி வந்த களியக்காவிளையை சேர்ந்த ஷாபி, அசப், அஷ்ரப், ரெஜித், ரசாக் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் வழக்கத்தைவிட 4 மடங்கு விலை உயர்த்தி இந்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாகவும், கேரளாவிற்கு அத்தியாவசிய காய்கறிகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் மறைத்து கடத்தி வருவதாகவம் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT