Published : 05 Apr 2020 11:29 AM
Last Updated : 05 Apr 2020 11:29 AM
ஊரடங்கால் தோவாளை மலர் சந்தை வாசமிழந்து வெறிச்சோடி காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான மலர் வியாபாரிகளும், விவசாயிகளும் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் பாரம்பரியமிக்க மலர் சந்தை உள்ளது. இங்குள்ள மலர்கள் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் அதிக அளவில் செல்கின்றன. மேலும் வெளிநாடுகளுக்கும் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. பண்டிகை நாட்களில் தோவாளை மலர் சந்தையின் பங்களிப்பு தமிழகம், மற்றும் பிற மாநிலங்களில் அதிகமாக காணப்படும்.
தற்போது ஊரடங்கை தொடர்ந்து அனைத்து தொழில், வர்த்தகம் முடங்கியுள்ள நிலையில், மலர் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. தோவாளை எம்.ஜி.ஆர். மலர் வணிக வளாகம் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. தோவாளையில் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வரும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள இந்த மலர் சந்தை, எப்போதும் வாகனங்களில் பயணிப்போரையும் கமகமக்க வைக்கும் மணத்துடன் வரவேற்பதுண்டு. ஆனால் ஊரடங்கை முன்னிட்டு மலர் சந்தை வாசமிழந்த நிலையில் வெறிச்சோடியிருப்பது மலர் வியாபாரிகளை கவலையடைய செய்துள்ளது.
தோவாளை மலர் சந்தைக்கு குமரி மாவட்டத்தில் மட்டுமின்றி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், களக்காடு, மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மலர் தோட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருவதுண்டு. இதைப்போல் சத்தியமங்கலம், திண்டுக்கல், மதுரை, உதகை, ஓசூர், பெங்களூரில் இருந்தும் தினமும் 100 டன்னிற்கு மேல் பூக்கள் வரும்.
ஆனால் தற்போது ஒரு கிலோ பூக்கள் கூட வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் உள்ளதால் ஒட்டுமொத்த மலர் வியாபாரமே ஸ்தம்பித்துள்ளது. இதனால் தோவாளை மலர் சந்தையை மையமாக கொண்ட வியாபாரிகள், விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.
இதுகுறித்து தோவாளை மலர் வியாபாரிகள் கூறுகையில்; தோவாளை மலர் சந்தை தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு மேல் வர்த்தகம் நடைபெறாமல் முடங்கியது தற்போது மட்டும் தான். ஊரடங்கு தொடங்குவதற்கு இரு மாதத்திற்கு முன்பே கரோனா பாதிப்பால் கேரளா, மற்றும் வெளிநாடுகளில் மலர் விற்பனை நின்றது. தற்போது அன்றாட கூலிக்கு கூட மலர்கள் விற்பனை செய்ய முடியாமல் தோவாளையில் உள்ள மொத்த வியாபாரிகளும், சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைப்போலவே தோவாளை, செண்பகராமன்புதூர், மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்த மலர் விவசாயிகளும் வருவாய் இன்றி தவிக்கின்றனர். மலர் தோட்டங்களை அழிக்கும் நிலைக்கு மலர் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழலை இதுவரை மலர் வியாபாரிகள் சந்தித்ததில்லை. கோயில்களும் மூடப்பட்டுள்ளதால் வீடுகளில் தொடுத்து விற்பனை செய்து வருவாய் ஈடுட்டவும் முடியவில்லை. நாள் ஒன்றிற்கு 2 கோடிக்கு மேல் மலர் வர்த்தகம் தோவாளையில் முடங்கியுள்ளது. இழப்பை சரிகட்ட மலர் வியாபாரிகள், மலர் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT