Published : 04 Apr 2020 09:02 PM
Last Updated : 04 Apr 2020 09:02 PM

ஏழை மக்களுக்கு 1000 ரூபாய் போதுமா? - ட்விட்டரில் கேள்வி எழுப்பியவருக்கு பீலா ராஜேஷ் பதில்

ஏழை மக்களுக்கு 1000 ரூபாய் போதுமா என்று தனது ட்விட்டர் தளத்தைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியவருக்கு பீலா ராஜேஷ் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் இன்றைய (ஏப்ரல் 4) நிலவரப்படி மொத்தம் 485 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. முன்பு, காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். தற்போது அதை நண்பகல் 1 மணி வரைதான் என மாற்றிவிட்டது தமிழக அரசு.

கரோனா வைரஸ் தொற்று தமிழகத்துக்குள் வந்ததிலிருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பீலா ராஜேஷின் செயல்பாட்டை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் பாராட்டியிருப்பது நினைவு கூரத்தக்கது.

இதனிடையே தினமும் கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்பாக மாலையில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது மட்டுமன்றி, தனது ட்விட்டர் தளத்தைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்புபவர்களுக்கும் பதிலளித்து வருகிறார் பீலா ராஜேஷ்.

இதில் அவரது ட்விட்டர் தளத்தைப் பின் தொடரும் ஒருவர், "28 நாள் தனிமையில் தாக்குப்பிடிக்க ஏழை மக்களுக்கு 1000 ரூபாய் போதுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக பீலா ராஜேஷ், "இது பொது விநியோக சேவையில் தரும் பொருட்களைத் தாண்டி தரப்படும் பணம். அம்மா உணவகங்களும் இந்த நேரத்தில் திறந்திருக்கின்றன. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அந்தந்த மாவட்டத்தின் எண்ணோடு சேர்த்து 1077 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சொல்லலாம்" என்று பதிலளித்துள்ளார்.

மேலும், "அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பீலா ராஜேஷ் இருவரும் இதற்கு ஒரு தெளிவு தர வேண்டும். பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் சொன்ன துணி முகக் கவசம் ஈரத்தை உறிஞ்சாதா? இந்த துணிக் கவசங்கள், கர்ச்சீஃப்கள் மூக்கிலிருந்து வரும் நீர்த்துளிகளை உறிவதால் இது மற்றவர்களுக்குத் தொற்றாக மாறாதா? தயவுசெய்து சீக்கிரம் இதுகுறித்துத் தெளிவு தாருங்கள்" என்று பீலா ராஜேஷ் ட்விட்டர் தளத்தைக் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்பினார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக பீலா ராஜேஷ், "நீர்த்துளிகள் காற்றில் நுழைவதைத் துணி முகக்கவசங்கள் தடுக்கின்றன. இது மருத்துவமனைகளுக்கு வெளியே, சமூக விலகலில் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. கவசத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவவும். மறக்காதீர்கள்" என்று பதிலளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x