Published : 04 Apr 2020 07:29 PM
Last Updated : 04 Apr 2020 07:29 PM
ஊரடங்கு காலத்தில் நிகழும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளைத் தடுக்க வேண்டும் என, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது
இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் இன்று (ஏப்.4) வெளியிட்ட அறிக்கையில், "நாடு முழுவதும் கரோனா நோய்த்தடுப்பு முயற்சியில் மத்திய அரசும், மாநில அரசும் தொடர்ந்து பல்வேறு கடுமையான முன்முயற்சிகளை எடுத்து வருவதற்கு ஆணையத்தின் சார்பாக நன்றியையும் வாழ்த்துகளையும் முதலில் தெரிவித்துக்கொள்கிறோம்.
நோய்த்தொற்று பரவாமல் இருக்க சமூக விலகல், தனிநபர் பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீடுகளில் நாம் அனைவரும் முடங்கியுள்ளோம். நாம் தனித்து இருப்பது என்பது நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காகத்தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்நிலையில், மகளிர் ஆணையத்திற்கு பல்வேறு விதமான நபர்கள் தொடர்பு கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் வீடுகளில் பெண்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது. வீடுகளில் அதிகபட்சமான குடும்பப் பணிகளைச் செய்து வருவது பெண்கள்தான் என்பது அனைவரும் அறிந்ததே.
இன்றைய சூழலில் வீட்டில் உள்ள அனைவரும் இல்லத்திலே இருப்பதால் கூடுதலான வீட்டு வேலைக்கு உட்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல்வேறு விதமான குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இன்றைய சூழலில் மன உளைச்சலால் அதிகமாக பாதிப்படைகிறார்கள்.
இந்த இக்கட்டான சூழலில் வீடுகளில் குடும்ப வன்முறை மூலம் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவது மிகவும் வருத்தத்துக்குரிய செய்தியாகும். எனவே, குடும்பங்களில் பெண்கள் மீதான வன்முறையை நாம் கண்டிப்பாக தடுத்தாக வேண்டும். குடும்ப வன்முறை என்பது ஒரு குற்றமாகும்.
எனவே, வீடுகளில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. அப்படி ஏதாவது வன்முறை நடந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அல்லது 181 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும். தமிழ்நாடு அரசு பல்வேறு மனநல ஆலோசகர்களை மாவட்ட வாரியாக நியமித்துள்ளது. அவர்களையும் தொடர்புகொள்ளலாம்
ஊடகங்களில் பெண்கள் மீது வன்முறைகள் நடப்பதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளையும் மனநலம், ஆற்றுப்படுத்துதல் தொடர்பான நிகழ்வுகளையும் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பங்கேற்கக்கூடிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் படி ஆணையத்தின் சார்பாக வேண்டுகிறோம்.
இது பெண்கள் மீது வன்முறை இல்லா சமூகம் படைப்பதற்கான ஒரு சிறந்த முயற்சியாகும். இந்த முயற்சியில் தாங்கள் சார்ந்திருக்கிற ஊடகங்களில் பெண்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்களில் வெளியாகும் நிகழ்வுகளில் பெண்களை உற்சாகப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும்.
அதுமட்டுமன்றி அனைத்துப் பெண்களும் இல்லத்தில் இருப்பதால் அவர்களுக்குப் போதிய சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்பினால் சிறப்பாக அமையும். அதிலும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் குறித்தும், பெண்கள் உரிமையும் சமூகப் பங்கேற்பு குறித்தும் விழிப்புணர்வும் சட்ட ஆலோசனைகளும் வழங்கி அவர்களுக்கு குடும்ப வன்முறை மற்றும் பல்வேறு விதமான பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் எந்த எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் யாரை அணுக வேண்டும் என்பதையும் பற்றிய தகவல்களை கொடுத்தால் பெண்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் இது தொடர்பான கட்டுரைகள், பேட்டிகள், சாதனைப் பெண்கள் போன்றவற்றை செய்தியாக, நிகழ்ச்சியாக தொடர்ந்து வெளியிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT