Published : 04 Apr 2020 02:45 PM
Last Updated : 04 Apr 2020 02:45 PM

தமிழ்நாடு முழுவதும் கரோனா சோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும்; தனியார் மருத்துவமனைகளையும் ஈடுபடுத்த வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள சோதனை மையங்களின் எண்ணிக்கை போதுமானது அல்ல என்று பலரும் சுட்டிக காட்டி வருகின்றனர். எனவே, சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு சோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழ்நாட்டில் கரோனா பரவல் இரண்டாவது கட்டத்தில்தான் இருக்கிறது. இன்னும் மூன்றாவது கட்டத்தை எட்டவில்லை என்று சுகாதாரத்துறைச் செயலாளர் அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிவதற்கான சோதனை மையங்களை அதிகரிக்க வேண்டுமென்றும், குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளையும் அத்தகைய சோதனைகளைச் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால் தற்போது இந்திய அளவில் தமிழகம் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தச் சூழலில் தமிழ்நாடு இன்னும் மூன்றாவது கட்டத்தை எட்டவில்லை என்று சுகாதாரத்துறைச் செயலாளர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், அதிக அளவில் சோதனைகள் செய்யப்பட்டால்தான், தொற்றுக்கு ஆளானவர்களையும் சந்தேகத்துக்கு உரியவர்களையும் உரிய முறைப்படி கண்காணிப்புக்கு உட்படுத்தி, 'சமூகப் பரவல்' என்கிற மூன்றாவது கட்டத்தை எட்டாமல் நாம் தடுக்க முடியும்.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள சோதனை மையங்களின் எண்ணிக்கை போதுமானது அல்ல என்று பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர். எனவே சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு சோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இதில் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளே ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளிலும் அத்தையை கட்டமைப்புகள் உள்ள மருத்துவமனைகளையும் இந்தப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தனியார் மருத்துவமனைகளில் சோதனை செய்வதற்கான கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடைய பாதுகாப்பு மிக மிக முக்கியமானது.

பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் கடைநிலை ஊழியர்களின் பாதுகாப்பு அலட்சியப்படுத்தப் படுவதாகவும் அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் புகார்கள் வருகின்றன. உடனடியாக இதில் கவனம் செலுத்தி அவர்களுக்கும், துப்புரவுப் பணியாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வீட்டுக்குக் கொண்டு சென்று வழங்கும் திட்டத்தை சில மாவட்ட நிர்வாகங்கள் நடைமுறைப்படுத்துவதாகத் தெரியவருகிறது. இதனை சிறு நகரங்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில் ஒருங்கிணைந்த முறையில் நடைமுறைப்படுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை இதில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x