Published : 04 Apr 2020 01:15 PM
Last Updated : 04 Apr 2020 01:15 PM
விழுப்புரத்தைச் சேர்ந்த 51 வயது நபர் கரோனா தொற்றால் உயிரிழந்ததாக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது.
தமிழகத்தில் கரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் பொது சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய் நிர்வாகத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளும் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளன.
தமிழகத்தில் கரோனா தொற்று, மார்ச் மாத ஆரம்பத்தில் காஞ்சிபுரம் பொறியாளருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. மார்ச் 6-ல் 6 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 22-ம் தேதி 9 ஆக உயர்ந்தது. மார்ச் 29-ம் தேதி வரை 50 என்கிற அளவில் இருந்த எண்ணிக்கை மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ,2 , 3 ஆகிய தேதிகளில் முறையே 67,124, 234,309,411 என்கிற எண்ணிக்கையில் எகிறியது. இதில் 7 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் முதன்முதலில் உயிர்ழந்தார். இந்நிலையில் விழுப்புரம் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 51 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
“டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த கோவிட்-19 பாசிட்டிவ் 51 வயது ஆண், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு (03.04.2020) மூச்சுத்திணறல் அதிகமானதில், இன்று காலை 7.44 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்” என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் 411 பேர். 7 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT