Published : 04 Apr 2020 09:24 AM
Last Updated : 04 Apr 2020 09:24 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா எதிரொலியாக தென்னை, மற்றும் சார்பு தொழில்கள் அடியோடு முடங்கியுள்ளது. இதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிற்கு மேல் சாகுபடியாகும் முதன்மை விவசாயமாக தென்னை சாகுபடி உள்ளது. தேங்காய், இளநீர் மட்டுமின்றி தென்னையில் உள்ள சார்பு பொருட்கள் மூலம் தினமும் பல லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்து வந்தனர்.
தென்னை ஓலை, ஈர்க்கு, கதம்பை, கயிறு, கதம்பை தூள், மற்றும் சார்பு பொருட்கள் தற்போது கரோனா பாதிப்பால் கடந்த இரு மாதங்களாக வெளிமாநிலம், மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் தேக்கமடைந்துள்ளன.
குறிப்பாக தென்னை ஈர்க்கு பிரித்தெடுப்பது குடிசைத் தொழிலாக உள்ளது. ஓலைகளில் இருந்து பிரித்து பெண்கள், முதியவர்கள் எடுக்கும் ஈர்க்கு கிலோ ரூ.20 ரூபாய் வரை விற்பனை ஆகி வந்தது.
தினமும் 5 கிலோ முதல் 10 கிலோ ஈர்க்கு எடுத்து ஏழை, மற்றும் நடுத்தர குடும்பத்தினர் இதன் மூலம் வருவாய் ஈட்டி வந்தனர். ஆனால் இவற்றின் கொள்முதல், மற்றும் விற்பனை எதுவும் இல்லாததால் இத்தொழில் முற்றிலும் முடங்கி போயுள்ளது.
இதைப்போலவே தென்னையில் இயந்திரம் மூலம் தேங்காய் வெட்டும் தொழிலை இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செய்து வந்தனர்.
தென்னை ஒன்றில் ஏறுவதற்கு ரூ.25 கூலியாக பெற்று வந்தனர். சராசரியாக தினமும் 40 மரம் வரை ஏறி தேங்காய் வெட்டி வருவாய் ஈட்டி வந்தனர்.
மேலும் தேங்காயில் உள்ள கதம்பை மூலம் பல கயிறு திரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. அத்தனையும் முடங்கியதால் அதில் பணியாற்றிய பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
அத்துடன் கயிறு தயார் செய்வதற்கான தும்பு, மற்றும் மூலப்பொருட்கள் தேக்கமடைந்து அழிந்து வருகின்றன. தேங்காய் வெட்டுவது முதல் தென்னையில் உள்ள உப பொருட்கள் மூலம் குமரி மாவட்டத்தில 5 லட்சம் விவசாயிகள், தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர். அனைவரும் தற்போது வேலையின்றி வீட்டில் முடங்கியுள்ளனர்.
இதுகுறிதது கயிறு தயாரிக்கும் ஆலைகள் வைத்திருப்போர் கூறுகையில்; கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்மையான வருவாய் ஈட்டும் விவசாய தொழிலாக தேங்காய், மற்றும் தென்னை சார்ந்த பொருட்கள் உள்ளன.
கயிறு திரிக்கும் தும்பு ஆலைகள் குமரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளன. ஊரடங்கால் இவை தற்போது செயல்படவில்லை.
2 மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளுக்குச் செல்லும் கயிறு தும்பு, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகமாக வீட்டு தோட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் கதம்பை தூள் ஆகியவை ஏற்றுமதியாகவில்லை இவை தேக்கமடைந்துள்ளதால் பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஆலைகள் இயங்காததால் வெளியே திறந்தவெளியில் கிடக்கும் கயிறு தும்புகள் அழுகி வீணாகும் நிலையில் உள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT