Published : 04 Apr 2020 07:31 AM
Last Updated : 04 Apr 2020 07:31 AM

டெல்லி மாநாட்டில் பங்கேற்று ஈரோடு திரும்பியதும் தலைமறைவானவர்களைத் தேடும் பணி தீவிரம்

ஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதியில், சுகாதாரத்துறை அறிவுறுத்திய சமூக இடைவெளியை பின்பற்றாமலேயே, அரசின் நிவாரணத் தொகை மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவர், அங்கிருந்து வெளியேறி, பால் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஈரோட்டில், கரோனா தொற்று சந்தேகத்தால் 25,557 வீடுகளைச் சேர்ந்த 95,692 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை சுகாதாரத் துறையினர் தினமும் இருவேளை, வீடு வீடாக பரிசோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியைச் சேர்ந்த ஒருவர், இருநாட்களாக அப்பகுதியில் இருந்து வெளியேறி, பெரியார் நகர் பாலகத்தில் பால் விநியோகம் செய்து வந்தது கண்டறியப்பட்டது. வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க அவரது கைகளில் முத்திரை வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கண்காணிப்பை மீறி அவர் தப்பியதும், ஆவின் பால் விநியோகத்தில் ஈடுபட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் அவர் கண்டறியப்பட்ட நிலையில், பெருந்துறை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டபம் வீதியைச் சேர்ந்த ஒருவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அவர் குடியிருந்த வீதிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தேடும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 27 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது தவிர வெளிமாவட்ட நபர்களோடு சென்று வந்த 6 பேரின் விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. ரயில் மட்டுமின்றி, விமானம் மூலமும் சிலர் டெல்லி சென்று வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மார்ச் 18, 19-ம் தேதிகளில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. டெல்லி சென்றுதிரும்பியவர்களில், அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு சிலர் செல்போனை அணைத்து விட்டு, தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 தாய்லாந்து நாட்டினருக்கு கரோனா தொற்று இல்லை. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் மற்ற மூவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ஈரோடு மாவட்டஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x