Published : 08 May 2014 11:16 AM
Last Updated : 08 May 2014 11:16 AM

கல், மண் சுமந்த கைகளில் தவழும் கல்வி விளக்கு: சாதிக்கும் மாலை நேரப் பள்ளிகள்

‘‘நிலங்களில்கூட இந்த நிலத்தில் இன்னதுதான் விளையும் என்று சொல்கிறார்கள். ஆனால், எல்லா பிள்ளைகளும் எல்லாமும் படிக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம்?’’ பொட்டில் அடித்ததுபோல் கேட்கிறார் பார்வதி.

மதுரை அருகேயுள்ள சீகுபட்டி, பார்வதியின் சொந்த ஊர். பி.எஸ்சி., கணிதம் படித்துவிட்டு தனியார் பள்ளியில் பணிபுரிகிறார். இவரது மாலை நேரப்பள்ளியில் 40 குழந்தைகள் படிக்கின்றனர். இவரைப் போலவே இன்னும் 7 பேர், சத்திரப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மாலை நேரப் பள்ளிகளில் பயிற்றுநர்களாக இருக்கின்றனர். இதில் 6 பேர் பெண்கள். அத்தனை பேருமே பட்டம் படித்தவர்கள்; படித்துக் கொண்டிருப்ப வர்கள்.

கிராமத்து பிள்ளைகளின் அறிவுக் கண்ணை விசாலப்படுத்துவதற்காக மதுரை அருகேயுள்ள சத்திரப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் காந்திய தொண்டு நிறுவனமான ’செசி’யால் (Centre For Educational Social Cultural Intration) இலவசமாக நடத்தப்படுவதுதான் இந்த மாலை நேர பள்ளிகள். இவற்றில் தற்போது 300 குழந்தைகள் படிக்கின்றனர். எதற்காக இந்தப் பள்ளிகள்? விளக்குகிறார் பார்வதி..

பக்கத்து கிராமங்களில் அதிகபட்சம் எட்டாவது வகுப்புக்குமேல் பிள்ளை களை படிக்க அனுப்ப மாட்டாங்க. செங்கல் சூளைக்கோ கட்டிட வேலைக்கோ அனுப்பிருவாங்க. இப்ப அந்த நிலைமை எல்லாம் மாறிப்போச்சு. இதுக்கு காரணம் ‘செசி’யோட மாலை நேரப்பள்ளிகள்தான். மாலையில் அஞ்சரை மணிக்கு இறை வணக்கத் துடன் தொடங்கும் பள்ளிகள், இரவு ஒன்பது மணிவரை நடக்கும்.

எங்கக்கிட்ட படிக்க வர்ற குழந்தை களுக்கு படிப்பு மட்டுமில்லாமல், அவங்களோட தனித்திறமைகளை யும் கண்டுபிடித்து அதிலும் பயிற்சி கொடுக்கிறோம். இதைத்தான் படிக்க வேண்டும் என்று எதையும் திணிப்பதில்லை. யாருக்கு எது சரியா வருமோ அந்தப் படிப்புல சேர்க்கச் சொல்லி பெற்றோருக்கு அறிவுரை கொடுக்கிறோம்.

அடுத்த தலைமுறையாவது சாதிய பாகுபாடுகளை மறக்க வேண்டும் என்பதற்காக உன்னதமான இன்னொரு வழக்கத்தையும் இந்தப் பள்ளிகளில் கடைபிடிக்கிறோம். சனிக்கிழமைகளில் பாடம் எதுவும் கிடையாது. குழந்தைகளின் தனித் திறன் பற்றிய வகுப்புகள்தான் நடக்கும். அன்று மட்டும் எல்லாரும் இரவுச் சாப்பாடு கொண்டு வருவார்கள். அனைவரது சாப்பாட்டையும் ஒன்றாக கலந்து உருண்டைகளாக பிடித்து அதை குழந்தைகளுக்கு கொடுக்கிறோம்.

தொடக்கத்தில், இதற்கு பெற்றோர் மத்தியில் கடும் எதிர்ப்பு. ‘அப்படியெல்லாம் கலந்து சாப்பிடக்கூடாது’னு கண்டிஷன் போட்டு அனுப்புவாங்க. ஆனா, குழந்தைகள் இங்க வந்ததும் சோத்துச் சட்டியை எங்ககிட்ட குடுத்துருவாங்க. இங்கே வர்ற குழந்தைகள் பன்முக திறமையோட ஜொலிக்கிறதால, பெற்றோரால் பிள்ளைகளை இங்கே அனுப்பாம இருக்க முடியல.

இந்தக் குழந்தைகளிடம் சேமிப்புத் திறனை வளர்க்குறதுக்காக தினமும் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் வீதம் கலெக்ட் பண்ணுவோம். சத்திரப்பட்டி ஐ.ஓ.பி-யில் ‘மலரும் குழந்தைகள் கூட்டமைப்பு’னு ஒரு கணக்கு வெச்சிருக்கோம். சேமிப்பு காசை மாதம் ஒரு தடவ அந்தக் கணக்குல சேர்த்துருவோம். இப்படியே வருஷத்துக்கு எட்டு பள்ளியிலும் சேர்த்து ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் சேமிப்பு வந்துரும். பள்ளிக்கூடம் திறந்ததும், அந்தப் பணத்தை எடுத்து குழந்தைகளுக்கு பிரிச்சுக் குடுத்துருவோம். அதை அவங்க படிப்பு தேவைக்கு பயன்படுத்திக்குவாங்க என்கிறார் பார்வதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x