Published : 03 Apr 2020 05:51 PM
Last Updated : 03 Apr 2020 05:51 PM
குமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கபபட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் 165 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 300 பேரை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 84 பேருக்கு கரோனா நோய்தொற்றிற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் டெல்லி மத மாநாட்டிற்கு சென்று வந்த 4 பேர் உட்பட 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே வெளிநாடுகளில் இருந்து குமரிக்கு வந்த 4500க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசித்த பகுதிகளான நாகர்கோவில் டென்னிசன்ரோடு, வெள்ளடிச்சிவிளை, தேங்காய்பட்டணம், அனந்தசாமிபுரம் ஆகியவை சீல் வைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நோய் தொற்று தென்படும் நபர்கள் தாங்களாகவே முன்வந்து குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077க்கு தகவல் தெரிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கரோனா தொற்று கண்டறியப்பட்ட 5 பேருடன் தொடர்பில் இருந்த நண்பர்கள், உறவினர்கள் 165 பேர் கண்டறியப்பட்டு ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மேலும் 300 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். குமரி மாவட்டம் முழுவதம் ஊரடங்கை மீறியதாக இதுவரை 1515 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 1201 வாகனங்கள் பறிமுதல் செய்யபபட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT