Published : 03 Apr 2020 03:06 PM
Last Updated : 03 Apr 2020 03:06 PM
தமிழகத்தில் சுற்றுலா, வேலை போன்ற காரணங்களுக்காக வந்து கரோனா ஊரடங்கால் சிக்கிக்கொண்ட 500-க்கும் மேற்பட்ட ஜெர்மன் மற்றும் மலேசிய நாட்டினர் இன்று 3 சிறப்பு விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரோனா பாதிப்பு நாடுமுழுதும் எதிரொலித்த நிலையில் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. 21 நாள் தேசிய அளவிலான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு, பொதுமக்கள் சமுதாய தனிமைப்படுத்துதலை கடைபிடித்து வருகின்றனர். அத்தியாவசிய போக்குவரத்து, பொருட்கள் வரத்து தவிர அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டது. விமான சேவையும் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் வசிக்கும் மலேசியா நாட்டவா்கள் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர். தங்களை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மலேசிய அரசும் இந்திய அரசுடன் பேசி தங்கள் நாட்டவரை சிறப்பு விமானங்களில் மலேசியா அழைத்து செல்ல அனுமதி கேட்டது. இதை பரிசீலித்த இந்திய அரசு அதற்கு அனுமதி அளித்தது.
இதேபோல் ஜெர்மன் நாட்டிலிருந்து வந்தவர்கள் 225 பேர் இதேபோன்று தங்கள் நாட்டுக்கு திரும்ப கோரிக்கை வைத்திருந்தனர், இவைகளை பரிசீலித்த இந்திய அரசு அனுமதி அளித்தது. மலேசிய நாட்டினரை அழைத்துச் செல்ல நேற்று இரவு மலேசியாவிலிருந்து மலிண்டா ஏா்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு காலியாக வந்தன.
சென்னை, சென்னை புறநகா் மற்றும் வட மாவட்டங்களிலில் வசித்த மலேசியா்கள் 344 போ் சென்னை விமான நிலையம் அழைத்து வரப்பட்டு அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு நள்ளிரவில் மூன்று மலேசிய விமானம் மூலம் அடுத்தடுத்து மலேசியா புறப்பட்டு சென்றனர்.
இதேபோல் இந்தியாவில் தங்கியிருந்த ஜொ்மன் நாட்டவா்கள் சுமாா் 225 பேருடன் ஏா் இந்தியா தனி விமானம் இன்று காலை 7 மணிக்கு சென்னையிலிருந்து மும்பை வழியாக ஜொ்மன் நாட்டின் பிராங்ஃபர்ட் நகருக்கு புறப்பட்டு சென்றது. இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளிலிருந்து 10 சொகுசு பஸ்களில் 225 பேரும் சென்னை விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனா்.
அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அவா்கள் உடமைகளில் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு பின்பு விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டனா். ஏற்கனவே முதல் விமானம் கடந்த 31-ம் தேதி சென்னை,ஹைதராபாத்,மும்பையிலிருந்த 350 ஜொ்மனியா்களுடன் பிராங்பாா்ட் சென்றது. இன்று சென்றது 2 வது விமானம் ஆகும்.
இதன் மூலம் இன்று ஒரே நாளில் சென்னையிலிருந்து 569 மலேசியா்கள்கள், ஜொ்மனியா்கள் 3 சிறப்பு விமானங்களில் தங்கள் நாட்டிற்கு திரும்பி சென்றுள்ளனா்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT