Published : 03 Apr 2020 12:39 PM
Last Updated : 03 Apr 2020 12:39 PM

மகாராஷ்டிராவில் இருந்து நடந்து வந்த தமிழக இளைஞர் உயிரிழப்பு; ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்; ராமதாஸ் வேண்டுகோள்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

மகராஷ்டிர மாநிலத்தில் தவிக்கும் 600-க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் சொந்த ஊர் திரும்ப ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என, பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வரும் ஏப்.14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் நடந்தே தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே வர்தா எனும் இடத்தில் வேளாண் கல்லூரியில் படித்து வந்தவர் 22 வயதான பாலசுப்பிரமணி லோகேஷ். தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவரான லோகேஷ், லாக்-டவுன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், தனது நண்பர்கள் 30 பேருடன் சேர்ந்து நடைபயணமாக சொந்த ஊருக்குப் புறப்பட்டார். ஏறக்குறைய 450 கி.மீ. தொலைவை 4 நாட்கள் நடந்தே கடந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே போவனப்பள்ளி சோதனைச் சாவடி அருகே வந்தபோது அங்கிருந்த வருவாய்த் துறையினர், போலீஸார் அவர்களை மறித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், நடந்து செல்லக்கூடாது, தங்குவதற்கு இடமும், உணவும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

அப்போது திடீரென லோகேஷ் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி திடீரென சுருண்டு கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த போலீஸார், வருவாய் அதிகாரிகள் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். ஆம்புலன்ஸில் ஏற்றும் முன் முதலுதவி அளிக்கப்பட்டபோது சிகிச்சை பலனளிக்காமல் லோகேஷ் உயிரிழந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஏப்.3) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து நாமக்கல் நகருக்கு நண்பர்களுடன் நடந்தே வந்த லோகேஷ் பாலசுப்ரமணியன் என்ற 21 வயது இளைஞர் தெலங்கானாவில் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

கரோனா ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் அங்கேயே இருப்பதுதான் பாதுகாப்பானது. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உணவு, தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்து பாதுகாப்புடன் வாழ வகை செய்ய வேண்டும்!

மகாராஷ்டிர மாநிலத்தில் தவிக்கும் 600-க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் சொந்த ஊர் திரும்ப ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். மகாராஷ்டிர அரசுடன் பேசி அங்குள்ள தமிழ் இளைஞர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை உறுதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x