Published : 03 Apr 2020 12:19 PM
Last Updated : 03 Apr 2020 12:19 PM

திண்டுக்கல்லில் முழுமையாக துண்டிக்கப்பட்ட நகரங்கள்: மக்கள் அனைவரையும் தனிமைப்படுத்தும் பணி தீவிரம்

திண்டுக்கல் நகருக்குள் நுழைய தடைவிதித்து பழநி சாலையை மறித்து அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பரவலாக இருந்ததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டு முற்றிலும் போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு நடவடிக்கைகள் தொடங்கியபோது யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. மேலும் ஊரடங்கு தொடங்கி ஒரு வாரம் வரை எந்த பாதிப்பும் இன்றி கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படாத மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டம் இருந்தது.

ஆனால், மார்ச் 31 ம் தேதி வந்த பரிசோதனை முடிவு, கரோனா பாதிப்பில் திண்டுக்கல் மாவட்டத்தை தமிழகத்தில் மூன்றாவது இடத்திற்கு கொண்டுசென்றது.

முதற்கட்டமாக டெல்லி மாநாட்டிற்குச் சென்றுவந்த 17 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் 17 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் 31 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து அறிய தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவப் பரிசோதனை முடிவுகளை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

கரோனா தொற்று ஏற்பட்ட 17 பேரும் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை என பரவலாக வசித்துள்ளனர். மேலும் டெல்லிசென்று திரும்பிய 31 பேரின் மருத்துவபரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதால், முன்னெச்சரிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, மாநிலச்சாலை, கிராமச்சாலை என அனைத்தையும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், போலீஸார் தடுப்புகள் அமைத்து மூடிவிட்டனர். அனைத்து நகரங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட ஒட்டன்சத்திரம் காந்திகாய்கறி மார்க்கெட், காய்கறிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏதுவாக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க சிலதினங்கள் செயல்பட்டது. தற்போது இந்த மார்க்கெட் மீண்டும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகர் பேகம்பூர் பகுதியில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் இந்த பகுதி முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

31 பேருக்கு அனுப்பப்பட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவதுறையினர் தெரிவிக்கின்றனர்.

கிராமப்புறங்களில் இருந்து ஒட்டன்சத்திரம் நகருக்குள் நுழைவதை தடுக்க சாலையை மறித்து அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x