Published : 02 Apr 2020 05:01 PM
Last Updated : 02 Apr 2020 05:01 PM
குண்டு வத்தலுக்கு வெளி மார்க்கெட்டில் விலை உயர்ந்த நிலையில், ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக கொள்முதல் விலை கேட்பதால் சுமார் 500 டன் குண்டு வத்தலை விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், சூரங்குடி, அரியநாயகிபுரம், தங்கம்மாள்புரம் போன்ற பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் வெங்காயம் பயிருக்கு ஊடு பயிராகவும், தனியாகவும் குண்டு மிளகாயை விவசாயிகள் பயிரிட்டனர்.
ஒரு ஏக்கர் நிலத்தில் தனியாக குண்டு மிளகாய் பயிரிட சுமார் 4 கிலோ விதை தேவைப்படுகிறது. பின்னர் உழவு, விதைப்பு, மருந்து தெளித்தல், களையெடுப்பு மற்றும் மிளகாய் பழம் பறிப்பு வரை ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர்.
மானாவாரி நிலங்களில் அனைத்து பயிர்களின் அறுவடை நிறைவடைந்த நிலையில், நீண்ட நாள் பயிர்களான பருத்தி, மிளகாய் மட்டுமே நிலங்களில் காணப்படுகிறது. இதில், கடந்த பிப்ரவரி இறுதி முதல் மிளகாய் பழம் பறிப்பு நடக்கிறது. விவசாயிகள் தங்களது வீடுகளுக்கு முன்பும்,
களத்துமேட்டிலும் மிளகாய் பழம் பறித்து வந்து காய வைத்துள்ளனர். மார்ச் முதல் வாரத்தில் ஒரு குவிண்டால் குண்டு வத்தல் ரூ.12 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால் கரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக வெளிமாநில குண்டு வத்தல் வரத்து அடியோடு நின்று விட்ட நிலையில், ஒரு குவிண்டால் குண்டு வத்தல் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக வியாபாரிகள் விலை கேட்கின்றனர்.
ஆனால், ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு வெளிமார்க்கெட்டில் சம்பா வத்தல் கிலோ ரூ.140-க்கும், குண்டு வத்தல் கிலோ ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவின் நடைமுறையில் உள்ள தற்போது சம்பா வத்தல் கிலோ ரூ.170-க்கும், குண்டு வத்தல் ரூ.230-க்கும் என விலை உயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் குறைந்த தொகைக்கு விற்பனை செய்ய மறுத்து, 500 டன் அளவிலான குண்டு வத்தலை மூடைகளில் கட்டி வீடுகளிலேயே இருப்பு வைத்துள்ளனர். இன்னும் நிலங்களில் மிளகாய் பழம் பறிப்பு பணியும் தொடர்கிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த வாரத்துக்குள் சுமார் 700 டன் வரை மிளகாய் இருப்பில் இருக்கும்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விளைச்சல் குறைவு ஏற்பட்டதால், குண்டு வத்தல் விலை ஒரு குவிண்டால் ரூ.27 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரை விற்பனையானது. இந்தாண்டு குவிண்டால் ரூ.12 ஆயிரம் விலை போனது.
கரோனா வைரஸ் காரணமாக அனைத்து விளை பொருட்களை போல் மிளகாய் வத்தலும் சுணக்கமாக காணப்படுகிறது. இதில் குண்டு வத்தலை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக வியாபாரிகள்
கேட்கின்றனர். ஆனால் வெளிமார்க்கெட்டில் கிலோவுக்கு ரூ.50 வரை விலை அதிகமாக உள்ளது. விவசாய விளை பொருட்களை வட்டாட்சியர் அனுமதி கடிதத்துடன் எடுத்துச்செல்லலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், வெளியே குண்டு வத்தல் வரத்து குறைவு போல் காட்டப்படுகிறது. அவர்கள் கேட்கும் விலைக்கு விற்பனை செய்தால் நஷ்டம் ஏற்படும் என்பதால் குண்டு மிளகாய் வத்தலை வீடுகளிலேயே இருப்பு வைத்துள்ளோம், என்றார் அவர்.
விளாத்திகுளம் அருகே இடைச்சிஊரணியை சேர்ந்த விவசாயி சுந்தர் கூறுகையில், “ஒரு ஏக்கருக்கு 5 குவிண்டால் வரை குண்டு வத்தல் மகசூல் இருக்கும். ஊரடங்குக்கு பின் வரும் நாட்களில் குண்டு வத்தலுக்கு நல்ல விலை கிடைக்கும் என நம்புகிறோம். இதனால் தான் இருப்பு வைத்துள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT