Published : 02 Apr 2020 04:33 PM
Last Updated : 02 Apr 2020 04:33 PM
கரோனா தொற்று பாதிப்பு அதிகமானால் சமாளிக்கும்வகையில், மதுரையில் 17 இடங்கள் கரோனா சிறப்பு வார்டுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் தினமும் அதிகரிக்கிறது. மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 9 பேர் வரை கரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தினமும் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரி்க்கிறது. இச் சூழலில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள பல்நோக்கு மருத்துவமனையின் கட்டிடம் கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான கூடுதல் மருத்துவ வசதியை ஏற்படுத்த மதுரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளது.
பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் மதுரை நகர், மாவட்டத்தில் அந்தந்த அரசு மருத்துவமனைகளுக்கு அருகாமையிலுள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் கரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக பொதுப்பணித்துறையின் பராமரிப்பிலுள்ள கல்வி நிலைய கட்டிடங்களை தயார்ப்படுத்துகின்றனர்.
இதன்படி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் அருகிலுள்ள மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி, சாத்தமங்கலம் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள், சட்டக்கல்லூரி மாணவியர் விடுதி, சட்டக் கல்லூரி, விரகனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அயன்பாப்பாகுடி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மேலூர் அரசு மருத்துவமனை அருகி லுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி, மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வாடிப்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உசிலம்பட்டி கள்ளர் மாணவர் விடுதி, உசிலம்பட்டி அரசு மாணவர்கள் விடுதி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி, திருமங்கலம் மாணவர் விடுதி, கள்ளர் பள்ளி மாணவர் விடுதி, அரசு ஹோயோபதி கல்லூரி, பேரையூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என, மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.
அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ போதிய மருத்துவ வசதிகள் உள்ளன. ஒருவேளை பரவல் அதிகரித்தால் அதற்கான ஏற்பாடு செய்கிறோம்,’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT