Published : 02 Apr 2020 02:43 PM
Last Updated : 02 Apr 2020 02:43 PM
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநில அரசு வழங்கும் நிவாரணப் பொருட்களின் அளவு அரசு அறிவித்துள்ளதைக் காட்டிலும் குறைத்து வழங்கப்படுவதாக பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கடலூர் மாவட்டம், ராமநத்தம், தொழுதூர், அரங்கூர், வைத்தியநாதபுரம், ஆகிய ஊர்களிலும் ஆயிரம் ரூபாய் பணத்துடன் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதில், ராமநத்தம் அடுத்த ஆலத்தூர் கிராம அங்காடியில் வழங்கப்பட்ட சர்க்கரை அளவு 1 கிலோவுக்குப் பதிலாக 600 கிராம் மட்டுமே இருப்பதாகப் புகார் எழுந்தது.
அதேபோல அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களிலும் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட எடை குறைவாக வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கிராம இளைஞர்கள் சிலர் அங்காடியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அங்குவந்த ஊராட்சி செயலர் விக்னேஷ்வரன் உள்ளிட்டவர்கள் இளைஞர்களைச் சமாதானப்படுத்தினர். பொருட்கள் வழங்குபவரிடம் எடையைக் குறைக்காமல் வழங்க அறிவுறுத்தப்பட்டது. அதன் பின்னர் சரியான அளவில் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதுபோலவே இன்னும் பல ஊர்களிலும் உள்ள ஊழியர்கள் அளவைக் குறைத்து வழங்குவதாக இன்று காலையிலிருந்தே பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். ஆபத்துக் காலத்தில் அரசு வழங்கும் நிவாரணத்தில் அங்காடி ஊழியர்கள் அளவைக் குறைக்கும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசின் நோக்கமே பாழாகி, மக்கள் மத்தியில் அரசுக்கு அவப் பெயர் ஏற்பட்டுவிடும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT