Published : 02 Apr 2020 02:31 PM
Last Updated : 02 Apr 2020 02:31 PM
திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து கே.பி.ராமலிங்கம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக விவசாய அணிச் செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்தார். எம்ஜிஆர் மறைவின்போது ஜெயலலிதாவை மிலிட்டரி வாகனத்திலிருந்து கீழே இறக்கிவிட்டவர்களில் கே.பி.ராமலிங்கமும் ஒருவர் என அப்போது கூறப்பட்டது.
அதிமுகவில் ஆர்.எம்.வீரப்பன் ஆதரவாளரான அவர் பின்னர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் நாமக்கல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர். விவசாய அணியில் மாநிலச் செயலாளர் பொறுப்பில் பல ஆண்டுகள் பதவி வகித்து வருபவர்.
இரண்டு முறை எம்.எல்.ஏ , ஒரு தடவை ராஜ்ய சபா எம்.பி.யாகப் பதவி வகித்தவர் கே.பி.ராமலிங்கம். இவருக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவியை சிபாரிசு செய்து வாங்கிக் கொடுத்தது மு.க.அழகிரி என்று திமுகவில் சொல்வார்கள். இந்நிலையில் சமீபகாலமாக கட்சி நடவடிக்கைகளில் கே.பி.ராமலிங்கம் அதிக ஈடுபாடு இல்லாமல் இருந்தார்.
கே.பி.ராமலிங்கம் விவசாய அணி தவிர தனியாக இயற்கை பாதுகாப்பு அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விரிவாக விவாதிக்க காணொலி மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த கே.பி.ராமலிங்கம் கட்சித் தலைமையின் கருத்தை மீறி மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகின்றன. அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லாதது, முதல்வர் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தக் கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
இதனால் கோபமடைந்த திமுக தலைமை அவரை விவசாய அணி தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கியது. இந்நிலையில் கே.பி.ராமலிங்கத்தின் பதவி நீக்கம் சரியல்ல அதுகுறித்து தலைமை பரிசீலிக்க வேண்டும் என மதுரை முன்னாள் மேயரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான செ.ராமச்சந்திரன் ஆதரவாகப் பேசினார். இது திமுகவில் முன்னெப்போதும் இல்லாத நிலை.
இந்நிலையில் கே.பி.ராமலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை:
“திமுக விவசாய அணி மாநிலச் செயலாளர் கே.பி.ராமலிங்கம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கே.பி.ராமலிங்கத்தின் செயல், செ.ராமச்சந்திரனின் ஆதரவுக்குப் பின் மு.க.அழகிரி இருப்பதாக திமுக தலைமை கருதுவதால் இந்த நடவடிக்கை என திமுக வட்டாரத்தில் தகவல் உலா வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT